/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பட்டா குளறுபடிகளை சரிசெய்ய 7 ஆண்டுகளாக போராட்டம்
/
பட்டா குளறுபடிகளை சரிசெய்ய 7 ஆண்டுகளாக போராட்டம்
ADDED : பிப் 21, 2024 02:25 AM
பல்லாவரம்:பல்லாவரம், ஜமீன் பல்லாவரத்தில், அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைக்கு வழங்கப்பட்ட பட்டாக்களில், நகரின் பெயர், நிலத்தின் அளவு, உரிமையாளர்கள் பெயர்கள் மாற்றி மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை திருத்தம் செய்து, துாய பட்டா வழங்கக்கோரி, அப்பகுதியை சேர்ந்த மூத்த குடிமக்கள், 7 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
ஜெயலட்சுமி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
தாம்பரம் மாநகராட்சி, ஜமீன் பல்லாவரத்தில், வார்டு - பி, பிளாக் - 59, நகர நில அளவை எண் - 43 - 49, ஜெயலட்சுமி நகர் உள்ளது.
இப்பகுதியில், 32 குடியிருப்புகள் உள்ளன. இது, டீ.டி.சி.பி., அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவாகும். 1974ல், இப்பகுதி உருவானது.
கடந்த 2017ல், இம்மனைகளுக்கு தோராய பட்டா வழங்கப்பட்டது. பட்டாக்களை, பல்லாவரம் பகுதி ஆவணத்திலும் பதிவு செய்யப்பட்டது.
ஆனால், கணினியில் பதிவேற்றம் செய்யும்போது, குடியிருப்பின் பெயர், ஜெயலட்சுமி நகருக்கு பதில் கிருஷ்ணா நகர் என்றும், மனைகளில் பரப்பு தவறாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சில பட்டாதாரர்களின் பெயரும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை மாற்றி, முறையாக துாய பட்டா வழங்குமாறு, போராடி வருகிறோம். இது தொடர்பாக, தாசில்தார் அலுவலத்தை தொடர்பு கொண்டால், கோவில் நிலம் என்றும், இப்பகுதி உட்பிரிவு செய்யப்படாமல் முழு புலமாக உள்ளதாகவும், வரைபடத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
ஆனால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஹிந்து அறநிலையத் துறையிடம் கேட்டதற்கு, சம்பந்தப்பட்ட பகுதி கோவில் நிலம் இல்லை என, பதில் அனுப்பினர்.
இது குறித்து கலெக்டர், தாம்பரம் கோட்டாச்சியர், தாசில்தார் என பலருக்கும் மனு அளிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு முறையும், வருவாய் துறை அதிகாரிகள் மனுக்கள் தொடர்பாக ஆய்வு செய்கின்றனர். பின், கிடப்பில் போடுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி, ஏழு ஆண்டுகளாக நிலவும் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

