/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடற்றோருக்கு மெரினாவில் காப்பகம்: திறந்து வைத்தார் உதயநிதி
/
வீடற்றோருக்கு மெரினாவில் காப்பகம்: திறந்து வைத்தார் உதயநிதி
வீடற்றோருக்கு மெரினாவில் காப்பகம்: திறந்து வைத்தார் உதயநிதி
வீடற்றோருக்கு மெரினாவில் காப்பகம்: திறந்து வைத்தார் உதயநிதி
ADDED : டிச 23, 2025 05:06 AM

சென்னை: மெரினாவில் அண்ணா பூங்கா அருகே, வீடற்றோருக்காக புதிதாக கட்டப்பட்ட இரவு நேர காப்பகத்தை, துணை முதல்வர் உதயநிதி நேற்று திறந்து வைத்தார்.
சிறந்த சுற்றுலா தலமாக மெரினாவை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு கடைகளை அமைத்து சுற்றுலா பயணியருக்கு கைவினைப்பொருட்கள், சிகை அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்வோர், இரவு நேரங்களில் தங்க இடமின்றி, வெட்டவெளியில் குடும்பத்துடன் கடற்கரையில் தங்கி வந்தனர்.
இந்நிலையில், அண்ணா பூங்கா அருகே முதற்கட்டமாக, 63 பேர் தங்கும் வகையில், 86.40 லட்சம் ரூபாய் செலவில், 2,500 சதுரடியில், வீடற்றோருக்கான இரவு நேர காப்பகத்தை, சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.
இந்த காப்பகத்தை நேற்று, துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.
தொடர்ந்து காப்பகத்தில் தங்கும் நபர்களுக்கு பாய், தலையணை, படுக்கைவிரிப்பு, போர்வை, தட்டு, டம்ளர், கைலி, சேலை உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பையும் அவர் வழங்கினார்.
இரவு நேர காப்பகத்தில் நவீன தங்கும் அறை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியே கழிப்பறை, குளியலறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பொருட்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அலமாரி வசதி செய்து தரப்பட்டுள்ளது. காப்பகத்தை தொண்டு நிறுவனம் மூலம் பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

