/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில தடகள போட்டி புதிதாக ஏழு சாதனை
/
மாநில தடகள போட்டி புதிதாக ஏழு சாதனை
ADDED : செப் 21, 2025 12:35 AM
சென்னை : செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து வரும் மாநில தடகள போட்டியின் முதல் நாள் முடிவில், ஏழு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட தடகள சங்கம் இணைந்து, இருபாலருக்குமான மாநில அளவிலான தடகள போட்டியை, செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு திடலில் நேற்று துவக்கின.
இதன் முதல் நாள் முடிவில், ஏழு புதிய மாநில சாதனை படைக்கப்பட்டுள்ளது.
ஆண்கள், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான ஈட்டி எறிதல் போட்டியில், நெல்லை தடகள சங்கத்தின் வீரர் பாலபஸ்கி 54.39 மீ., எறிந்து, தன் சொந்த சாதனையான 53.11 மீட்டரை முறியடித்துள்ளார். 60 மீ., ஓட்டப்பந்தயத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் அபிநாத், போட்டி துாரத்தை 7.03 வினாடியில் கடந்து புதிய சாதனை படைத்தார்.
ஆண்கள் 18 வயதுக்கு உட்பட்டோர் 100 மீ., ஓட்டப்பந்தயத்தில் கோவை மாவட்டத்தின் நெயில் சாம்ராஜ், போட்டி துாரத்தை 10.68 வினாடியில் கடந்து, சாதனை படைத்துள்ளனர்.
பெண்கள் 16 வயதுக்கு உட்பட்டோர் உயரம் தாண்டுதலில், தமிழ்நாடு தடகள சங்கத்தின் தன்யா 1.50 மீ., உயரம் தாண்டி சாதனை; குண்டு எறிதல் போட்டியில் செங்கல்பட்டைச் சேர்ந்த ஸ்ரீ லேகா 11.44 மீ., எறிந்து சாதனை; தடை தாண்டுதல் போட்டியில் திருப்பூர் மாவட்டத்தின் வர்ஷிகா போட்டி துாரத்தை 11.79 வினாடியில் கடந்து, புதிய சாதனையை படைத்துள்ளார்.
அதேபோல், பெண்கள் 20 வயதுக்கு உட்பட்டோர் டிரிபுள் ஜம்ப் போட்டியில், சென்னையின் சாதனா ரவி 12.98 மீ., தாண்டி புதிய சாதனை படைத்தார்.