/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணியாளர்கள் மீண்டும் நேற்று உண்ணாவிரதம் வழக்கம்போல கைது செய்து அப்புறப்படுத்தியது போலீஸ்
/
துாய்மை பணியாளர்கள் மீண்டும் நேற்று உண்ணாவிரதம் வழக்கம்போல கைது செய்து அப்புறப்படுத்தியது போலீஸ்
துாய்மை பணியாளர்கள் மீண்டும் நேற்று உண்ணாவிரதம் வழக்கம்போல கைது செய்து அப்புறப்படுத்தியது போலீஸ்
துாய்மை பணியாளர்கள் மீண்டும் நேற்று உண்ணாவிரதம் வழக்கம்போல கைது செய்து அப்புறப்படுத்தியது போலீஸ்
ADDED : செப் 10, 2025 12:27 AM

சென்னை, பணி நிரந்தரம் கோரி போராடி வரும் துாய்மை பணியாளர்கள், ரிப்பன் மாளிகை அருகே நேற்றும் திடீரென உண்ணாவிரத போராட்டத்திற்கு ஒன்று சேர முயன்ற நிலையில், உடனடியாக அவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனால், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில் பணியாற்றிய, 2,000க்கும் மேற்பட்டோருக்கு, தனியார் நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டாலும், அவர்களுக்கான ஊதியம் குறைக்கப்பட்டது.
தொடர் போராட்டம் இதை கண்டித்து, தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதி அளித்ததுபோல், பணி நிரந்தரம், ஏற்கனவே வாங்கி கொண்டிருந்த அதே ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆக., 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை தொடர் போராட்டங்களில் துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி நள்ளிரவில் அனைவரும் கைது செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து, கடந்த 4ம் தேதி சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் துாய்மை பணியாளர்கள் ஒன்று கூடிய நிலையில், அப்போதும் வலுக்கட்டாயமாக போலீசார் வெளியேற்றினர்.
கொருக்குப்பேட்டையில் துாய்மை பணியாளர் வீட்டில், 13 பேர் அமர்ந்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர்.
இத்தகவல் அறிந்து, 200க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் ஒன்றுகூடிய நிலையில், அவர்களையும் போலீசார் கைது செய்து, இரவில் விடுவித்தனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், நேற்று மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை துாய்மை பணியாளர்கள் துவங்கினர்.
மாநகராட்சி ரிப்பன் மாளிகை அருகே உள்ள அல்லிகுளம் பிப்பீள் பார்க் சாலையில், அவர்களை கூட விடாமல் உடனடியாக போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
அதன்படி, 11 பெண் துாய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்து, அருகாமையில் உள்ள சமுதாய நல கூடத்தில் அடைத்தனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்திற்கு வருவோரை, தீவிர சோதனைக்கு பின் போலீசார் அனுமதித்தனர்.
தேர்தல் வாக்குறுதி இதுகுறித்து, துாய்மை பணியாளர்கள் கூறியதாவது:
திடீரென கைது செய்து, நள்ளிரவு 1:30 மணியளவில் பெண்கள் என்றும் கூட பாராமல், நடுரோட்டில் இறக்கி விடுகின்றனர். வேலை தானே கேட்கிறோம். வேலை கேட்க கூட எங்களுக்கு உரிமை இல்லையா.
வேலை இல்லையென்றால், நிரந்தரமாக எங்களை சிறையில் அடையுங்கள். இந்த அரசு மனசாட்சி இல்லாமல் செயல்பட்டு வருகிறது. எங்கள் உயிரே போனாலும், உண்ணாவிரத போராட்டம் தொடரும்.
சாலையில் கிடந்த தங்க செயினை துாய்மைப் பணியாளர் ஒப்படைத்த போது, முதல்வர் கவனத்துக்கு சென்றது. இத்தனை நாட்களாக துாய்மை பணியாளர்கள் போராடி வருகிறோம்.
இவை, முதல்வர் கவனத்துக்கு செல்லவில்லையா. முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும்படி தான் கேட்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னணி என்ன?
துாய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு அ.தி.மு.க., காங்கிரஸ்., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தன. இந்த போராட்டத்தை மாநில அளவில் முன்னெடுக்க அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டன.
ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி, துாய்மை பணியாளர்கள் அகற்றப்பட்டனர். தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் ஆதரவு மற்றும் திரைப்பட இயக்குநரின் அமைப்பு வாயிலாக, இப்போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த போராட்டத்திற்கு பின்னணியில் இருப்பவர்களின் பட்டியலை போலீசார் சேகரிக்கும் நிலையில், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மண்டல அலுவலகம் முற்றுகை
துாய்மை பணியாளர்கள் கைதைக் கண்டித்து, அம்பத்துார் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு, துாய்மை பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நிரந்தரம் கோரியும், துாய்மை பணியை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்கள் கோஷம் எழுப்பினர். போலீசார் பேச்சு நடத்திய பின், அவர்கள் கலைந்து சென்றனர்.