/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.2 கோடி வணிக வளாகத்திற்கு பூட்டு: ஏலம் எடுக்க ஆளில்லாததால் வீண்
/
ரூ.2 கோடி வணிக வளாகத்திற்கு பூட்டு: ஏலம் எடுக்க ஆளில்லாததால் வீண்
ரூ.2 கோடி வணிக வளாகத்திற்கு பூட்டு: ஏலம் எடுக்க ஆளில்லாததால் வீண்
ரூ.2 கோடி வணிக வளாகத்திற்கு பூட்டு: ஏலம் எடுக்க ஆளில்லாததால் வீண்
ADDED : டிச 15, 2025 05:01 AM

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்துாரில் திறந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், வணிக வளாகம் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கடைகளுக்கு வாடகை அதிகம் என்பதால், ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை என்பது தெரியவந்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சி, நான்காவது மண்டலம், பழைய பெருங்களத்துாரில், 30,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்க, தாம்பரத்திற்கு செல்கின்றனர். இதனால், பயண நேரம், செலவு அதிகமாகிறது.
இதனால், பொதுமக்களின் வசதிக்காகவும், வணிக சேவைகளை மேம்படுத்தவும், பெருங்களத்துாரில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, பெருங்களத்துார், காமராஜர் சாலையில், மண்டல அலுவலகம் எதிரே, மூலதன மானிய திட்டத்தின் கீழ், 2 கோடி ரூபாய் செலவில், 27 கடைகள் உடைய நவீன வசதிகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட்டது. கடந்த 2024, பிப்., 24ம் தேதி திறக்கப்பட்டது.
வணிக வளாகம் கட்டி ஒன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் பூட்டி வைக்கப்பட்டு வீணாகி வருகிறது. பலமுறை ஏலம் விட்டும் யாரும் எடுக்காததும், முன்வைப்பு தொகை மற்றும் மாத வாடகை கட்டணம் அதிகம் என்பதாலும், வணிகர்கள் ஆர்வம் காட்டாதது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வணிகர்கள் கூறியதாவது:
மாநகராட்சி கட்டிய கடைகள், ஒரே அளவில் இல்லை. 1,000, 800 என மாறுபட்ட சதுர அடி அளவில் கட்டப்பட்டுள்ளன. தவிர, இந்த வணிக வளாகம் பிரதான சாலையில் இல்லாமல், முடிச்சூர் உட்புற சாலையில் கட்டப்பட்டுள்ளதால், ஏலம் எடுக்க பலரும் தயங்குகின்றனர்.
கடைக்கு வாடகையாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மாதம் 40,000 ரூபாய், 10 மாத முன்வைப்பு தொகை கேட்பதால், யோசிக்க வேண்டியதாகிறது.
பிரதான பகுதி இல்லை என்பதால், பொருட்களை வாங்க மக்கள் வருவரா என கேள்விக்குறியாக உள்ளது. முதலுக்கு மோசம் வந்துவிடும் பயம் உள்ளது.
குறிப்பாக, மாநகராட்சி அதிகாரிகள் முறையாக திட்டமிடாமல் கட்டியதுதான், வணிக வளாகம் பூட்டியே கிடப்பதற்கு காரணம்.
வாடகையை குறைத்து, ஏலம் விட்டு, வணிக வளாகத்தை திறக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
இதுவரை, ஐந்து முறை ஏலம் விடப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறை நிர்ணயித்த ஒரு சதுர அடி 50 - 52 ரூபாய் வாடகை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாடகை அதிகம் என்பதால், ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. எண் - 5 என்ற கடை மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வாடகையை குறைக்க வேண்டும் எனில், ஆன்லைன் வாயிலாக இரண்டு முறை ஏலம் வைத்து, அதன்பின் தான் குறைக்க முடியும். அதனால், வரும் டிசம்பர், 15ம் தேதி ஆன்லைன் ஏலம் வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

