/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இனி மொபைல் செயலி வழியாக வாடகை செலுத்த முடியாது
/
இனி மொபைல் செயலி வழியாக வாடகை செலுத்த முடியாது
ADDED : செப் 19, 2025 01:51 AM
சென்னை 'போன்பே, பேடிஎம், கிரெடிட், அமேசான் பே' உள்ளிட்ட மொபைல் செயலிகளின் வாயிலாக, கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாடகை கொடுக்கும் வழிமுறை, ஆர்.பி.ஐ.,யின் நெறிமுறைகளை அடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பலரும் இந்த வசதியை பயன்படுத்தி, வீட்டு உரிமையாளர்களுக்கு வாடகை கொடுத்து வந்தனர். இதில் பல சவுகரியங்கள் இருந்தன. வாடிக்கையாளர்களுக்கு ரிவார்டு புள்ளிகளோ, கேஷ் பேக்கோ கிடைத்தது.
பணத்தை கட்டுவதற்கு குறிப்பிட்ட காலம் வரை வட்டியில்லா அவகாசம் கிடைத்தது. கையில் பணமில்லாத போது கிரெடிட் கார்டை பயன்படுத்தி வீட்டு வாடகையை கொடுத்துவிட்டு, பணம் வரும் போது திருப்பி செலுத்திக் கொள்ளும் பணச் சுழற்சி வசதி இருந்தது. கட்ட முடியாத பணத்துக்கு இ.எம்.ஐ., போட்டுக் கொள்ளவும் வழியிருந்தது.
ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு
இந்த விஷயத்தில் இப்போது ஆர்.பி.ஐ., தெளிவான நெறிமுறையை வெளியிட்டுள்ளது. கே.ஒய்.சி., விபரங்களை கொடுத்து முறையான வணிகராக பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே, 'பேமெட் அக்ரிகேட்டர்'கள் பணம் வழங்க வேண்டும். அப்படி செய்யாதவர்களோடு வர்த்தக பரிவர்த்தனைகளில் ஈடுபடக் கூடாது என்று ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
என்ன பிரச்னை?
சமீபகாலமாக மொபைல் நிதி செயலிகளில், வாடகை பரிவர்த்தனை ஒரு தனிப் பிரிவாகவே வளர்ந்து வந்தது. இத்தகைய செயலிகள், வீட்டு வாடகையை கிரெடிட் கார்டில் சேர்த்துக் கொண்டு, நேரடியாக வீட்டு உரிமையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பி வந்தன.
இதில், வீட்டு வாடகைதாரருடைய எந்தவிதமான ஆவணங்களும் சரிபார்க்கப்படுவதில்லை. வாடகை என்ற பெயரில், பல்வேறு தரப்பினருக்கும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணம் அனுப்பி வைப்பது தொடர்ந்தது. இதனால், கிரெடிட் கார்டுகளில் குறைந்தபட்ச தொகை கூட கட்டாமல், பணம் சிக்கிக்கொள்வது அதிகமானது.
வங்கிகள் உஷார்
இந்தப் பிரச்னையை முன்னதாகவே பல வங்கிகள் உணர்ந்தன. உதாரணமாக, கடந்த ஆண்டு ஜூனிலேயே எச்.டி.எப்.சி., வங்கி, இத்தகைய செயலிகள் வழியாக கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாடகை செலுத்தும் போது, 1 சதவீதம் கட்டணம் வசூலிக்கத் துவங்கியது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியும், எஸ்.பி.ஐ., கார்டும் வாடகை பரிவர்த்தனைகளுக்கு வழங்கப்படும் ரிவார்டு புள்ளிகளை நிறுத்தியது. எஸ்.பி.ஐ., கார்டு நிறுவனம், இத்தகைய பரிவர்த்தனைகளுக்கு முதலில் 99 ரூபாயும், பின்னர் 200 ரூபாயும் கட்டணம் வசூலிக்கத் துவங்கியது. தற்போது, மொபைல் செயலி வழியாகச் செய்யப்படும் வாடகை பரிவர்த்தனைகளை முழுமையாக ஆர்.பி.ஐ., நிறுத்தியுள்ளது.
இனி என்ன?
இனி செயலிகளை கொண்டு கிரெடிட் கார்டு வழியாக வாடகை செலுத்த முடியாது. யு.பி.ஐ., நெப்ட், ஆர்.டி.ஜி.எஸ்., - ஐ.எம்.பி.எஸ்., வழியாகவோ மற்றும் காசோலை வாயிலாகவோ தான் வாடகை செலுத்த முடியும்.