sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 'கல்யாணி'யில்தான் எத்தனை பரிமாணங்கள்!

/

 'கல்யாணி'யில்தான் எத்தனை பரிமாணங்கள்!

 'கல்யாணி'யில்தான் எத்தனை பரிமாணங்கள்!

 'கல்யாணி'யில்தான் எத்தனை பரிமாணங்கள்!


ADDED : ஜன 04, 2026 06:02 AM

Google News

ADDED : ஜன 04, 2026 06:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருண் நரசிம்மன்

ம யிலாப்பூர் சுந்தரேசன் தெருவில், வி.வி.எஸ்.முராரி, தன் தந்தை பெயரில் நடத்திவரும், வி.வி.எஸ்., பவுண்டேஷன் அறக்கட்டளையின், 'ஏகாந்த வரிசை' ஒன்றரை மணி நேரக் கச்சேரிகள் காலை 6:00 மணிக்கே தொடங்கி விடுகின்றன.

இருப்பினும், சிறு ஆஞ்சநேயர் கோவில் வளாகம் அவ்வப்போது நிரம்பிக் களைகட்டுவது, முடிவில் வினியோகம் செய்யப்படும் சுவையான பொங்கல் பிரசாதத்தால் அல்ல; தன் பங்கிற்கு முராரியே வழங்கிய வயலின் கச்சேரி (கமாஸ் ராக சுஜன ஜீவனா கிருதி, ஆனந்த பைரவி, வாசஸ்பதி ஆலாபனைகள்) சுநாத இதம் என்றால், அடுத்தொரு நாள் இளம் கலைஞர் சுருதி சாகர் வழங்கிய குழலிசை பிரமாதம்.

தோடி ராக வர்ணத்தில் தொடங்கி, சாரங்கா, யதுகுலகாம்போதி, கரஹரபிரியா, கானடா என, எடுத்துக்கொண்ட ராகங்கள் அனைத்திலும், சிறு பெரு ஆலாபனைகளாகட்டும், சார்ந்த கிருதிகளின் சொல் பாங்கான வாசிப்புத் தன்மையாகட்டும்,

நிரவல் ஸ்வரகல்பனைகளில் வெளிப்படுத்தும் நிதானம், கற்பனை வளம் என, சுருதி சாகர் நம் செவ்வியல் இசையின் வருங்கால குழல் வாத்திய நட்சத்திரம் என்பதை உறுதி செய்தார்.

அம்ருதவாஹினி (ஸ்ரீராமபாதமா கிருதி) ஸ்வரகல்பனையை மின்னல் தெறித்தார் போல, பிருக்கா சங்கதிகளுடன் முடித்தது சிலிர்ப்பு.

---ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் திறந்த வளாகத்தில், வி.வி.எஸ்., பவுண்டேஷன் நடத்தி வந்த 'மங்கல இசை விழா' காலைக் கச்சேரிகளின் நிறைவாக, அய்யம்பேட்டை கேசவராஜ் நாகஸ்வரம் வாசித்தார். தென்னம்பாக்கம் விக்னேஷ் உடன் வாசித்தார்.

ஸ்ரீரஞ்சனி ராகத்தில் தியாகராஜரின், 'புரோசேவாரெவரே' கிருதிக்கு அடுத்து, சாவேரி ராகத்தில் பளிச் எடுப்புடன் பிசிறுகளற்ற வாக்கிய சஞ்சாரங்களுடன், அருமையான ஆலாபனை செய்தார்.

தொடர்ந்து, தஞ்சை ஜில்லா விழாக் கச்சேரிகளில் என்றும் பிரசித்தமான, 'பாவயாமி ரகுராமம்' கிருதியை வாசிக்க, என் பால்ய மகிழ்நாட்களின் நினைவுகளோடு வெகுவாய் ரசித்தேன். இடும்பவனம் மணிகண்டனும், பணப்பாக்கம் தமிழ்ச்செல்வனும் நல்ல தவில் துணை வழங்கினர்.

---மூன்று முன்னணிக் கலைஞர்களின் நொடிக்கு நாலு விகிதம், ராக ஸ்வர ஏற்ற இறக்கப் பயிற்சி நிமித்தமான ஆலாபனைகளைக் கேட்டு நொந்திருந்த செவிக்கு, நாத இன்பத்தில் மாலை தனிக் கச்சேரியில் இளம் கலைஞர் சாருலதா சந்திரசேகர், சஞ்சார பாவமாக வீணையிசையில் செய்த பந்துவராளி ஆலாபனை, செவ்வியல் பிறழ்வாத இன்னிசையாய் அமைந்தது.

நாதோபாசனா கிருதிக்கு முன் செய்த, பேகடா ராக ஆலாபனையும் தரமானது; அபாரம் என்பதற்கில்லை.

சம்ஸ்கிருத கல்லுாரியில், பாட்டியும், மூத்த வீணையிசைக் கலைஞருமான ஆர்.எஸ்.ஜெயலட்சுமியுடன் இணைந்து, சாருலதா அளித்த மற்றொரு கச்சேரியில், கல்யாணி ராக ஆலாபனை (கிருதி கமலாம்பா பஜரே) ஒருவரது கம்பீரம் என்றால், மற்றொருவரது காருண்யம்.

கல்யாணியில்தான் எத்தனை பரிமாணங்கள். தனிக்கச்சேரிகளில் இயல்பாய் எழுந்துவிடக்கூடிய மனக்கவலைத் தடுமாற்றங்களைக் குறைத்துப் படைப்பு ஊக்க இசையங்கங்கள் மேடையில் பரிமளிக்கும் வண்ணம், முனைப்புடன் உழைக்கையில், சாருலதாவிற்கு வீணையிசையில் முன்னணி இடம் கைகூடிவிடும் என, உறுதிபடச் சொல்லலாம்.

இவ்வகை உயரிசை விருந்து, சராசரி சீசன் கூட்டத்தினரின் குவிப்புலத்திற்கு வெளியே, அன்றாடம் இலவசமாக வழங்கப்பட்டு, உதாசினமாகிச் செல்வது, நாளுக்கு 80 முதல் 100 கச்சேரிகள் நடந்தேறும் மார்கழி விழாவின் தவிர்க்கவியலாத் துயரம்.

ஐந்து ராகங்களிலும் அசத்திய குருசரண்

ப த்தாண்டுகளுக்கு முன்கூட அரைமணியாவது பல ராகங்களில் தனி அங்கமாய் விரித்துப் பாடப்பட்ட 'விருத்தம்' அநேகமாய், இன்றைய கச்சேரிகளில் வழங்கொழிக்கப்பட்டு விட்டது. சிலர் மட்டும் கிருதிக்கு முன் (பெண்கள் எம்.எஸ்., பாணியில் கச்சேரி தொடக்கத்தில்) அதே ராகத்தில், ஒரு சுலோகம் பாசுரம் எனச் சிறு நியாயம் செய்கிறார்கள்.

வித்திய பாரதி அரங்கில், 'ஜலஜாக் ஷி' ஹம்ஸத்வனி ராக வர்ணம், தோடி ராகத்தில் அன்றைய திருப்பாவை எனத் தொடங்கிய சிக்கில் குருசரண், 'வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்' என்று பிலஹரியில் விருத்தமாகப் பாடி, தொடர்ந்து கோடீஸ்வரரின், 'சித்தி விநாயகனே' கிருதியைப் பாடினார்.

அன்று மிருதங்கம் வாசித்த பத்ரி சதீஷ்குமாரிடம், ஐந்தாண்டுகளுக்குமுன் கற்றுக்கொண்ட கோர்வையை, ருத்ரபிரியா ராக (ருத்ரகோப ஜாத எனும் தீக் ஷதர்) கிருதியின் ஸ்வரகல்பனை முடிவில் மேல்காலத்தில் வழங்கி அசத்தினார்.

தியாகராஜரின் பஞ்சரத்ன கிருதிகளின் ஐந்து ராகங்களையே விரித்து ஆலாபனைகளும், 'தான'மும் செய்து, மாணிக்கம், மரகதம், மௌத்திகம், நீலம், வஜ்ரம் (வைரம்) என்று ஐந்து ரத்தினங்களைக் குறிப்பிட்டு, 'தியாகராஜாய நமஸ்தே' என, அமைந்த பல்லவியை மிஸ்ர திரிபுடை தாளத்தில் ஐந்து ராகங்களிலும் பல சுற்றுகள் நிரவல் பாடி வழங்கியது இக்கச்சேரியின் உயரொளி.

வேறு மேடைகளில் வேறுவிதமாகச் செயல்படும் அதே பக்கவாத்தியக் கலைஞர்கள், செவ்வியல் வழுவாத படைப்பு ஊக்கத்துடன் பாடகர் முன்னடத்துகையில், தாங்களும் அவ்வாறே என, ஒத்திசைந்தெழுவதை குருசரணின் கச்சேரியில் காண முடிந்தது. பலே.

சூரிபாபுவிடம் பாலபாடம் பயிலணும்

ச ம்ஸ்கிருத கல்லுாரியில் மல்லாடி சூரிபாபு கச்சேரி, மூத்த தலைமுறையினரின் மற்றொரு முத்தாய்ப்பு. அசாவேரி வர்ணத்தில் தொடங்கியவர், 'ஏ பாபமு சேத்தி ரா ராமா' என, தியாகையரின் கிருதியை அடானாவில் இறைஞ்சும் உணர்வு வெளிப்படப் பாடினார்.

உடன் வாசித்த இளவயது நிஷாந்த் சந்திரன் மிருதங்கம் ஜோர். வயலின் இன்னமும் உழைக்க வேண்டும்.

சூரிபாபு, 'சுஜன ஜீவனா ராமா' கிருதிக்கு முன் செய்த கமாஸ் ஆலாபனை சீசனில், அரிதாகவே கிடைக்கும் என்றால், 'ஹிமகிரி குமாரி' கிருதிக்கு முன் செய்த ரகுபிரியா ராக ஆலாபனை வாழ்நாளுக்கே அரிதானது எனலாம்.

ராக ஸ்வரங்களில் தவறின்றி ஏறியிறங்கிவிட்டேன் என, ஆலாபனை செய்பவர்கள், ராகத்திற்கான தனிப்பட்ட உருவம் வருமாறு, சம்பூர்ண மேள ராகங்களை எவ்வாறு ஆலாபனை செய்ய வேண்டும் என்று, இவரிடம் பாலபாடம் பயில வேண்டும்.

இரண்டு ஆயிற்றே என்கையில் அடுத்த ஆலாபனை முகாரி ராகத்தில். இதற்கான, 'ஏ மனிதே நீ மேகி' கிருதியே முக்கியமான உருப்படி. உடன் பாடியவருடன் ஒப்பிட்டுக் கேட்கையில், இவ்வயதிலும் சூரிபாபு குரலில் வெளிப்படும் பிருக்கா கார்வை ஸ்புரிதங்களை வியந்து ரசிக்க முடிந்தது. இசைஞானத்திற்கு வயதுண்டோ.






      Dinamalar
      Follow us