/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரிலீசானதும் கைவரிசை வாலிபருக்கு '‛காப்பு'
/
ரிலீசானதும் கைவரிசை வாலிபருக்கு '‛காப்பு'
ADDED : மார் 10, 2024 12:28 AM

அம்பத்துார், சென்னை அம்பத்துார் அடுத்த கள்ளிக்குப்பம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் அஜய், 26. கடந்தாண்டு, அம்பத்துாரில், மொபைல் போன் பறிப்பு வழக்கில் கைதானார்.
அவர், மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் இருந்ததால், குண்டர் தடுப்பு சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஓராண்டு தண்டனைக்கு பின், கடந்த மாதம், 22ம் தேதி விடுதலையானார். அன்றே, அம்பத்துார் மார்க்கெட் பகுதியில் இரு சக்கர வாகனம் திருடினார். அதன் பின், அம்பத்துார் திருவேங்கடம் நகரில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம், கத்திமுனையில், மொபைல் போன், 3,000 ரூபாய் பறித்தார்.
அதை தொடர்ந்து, கடந்த 4ம் தேதி, அம்பத்துார் ஞானமூர்த்தி நகரில் மோட்டார் சைக்கிள் திருடினார்.
அதன் பின், அம்பத்துார், சாம்தாரியா நகரில், நான்கு மொபைல்போன் மற்றும் புதுார், பானு நகரில், இரண்டு மொபைல்போன், 8ம் தேதி, அம்பத்துார் விஜயலட்சுமி புரத்தில், தனியார் நிறுவன ஊழியரிடம், ஒரு மொபைல் போன், 3,000 ரூபாய் பறித்தார்.
பொருட்களை பறிகொடுத்தவர்கள் அம்பத்துார் போலீசில் புகார் செய்தனர். ஆவடி கமிஷனர் உத்தரவின்படி, தனிப்படை போலீசார், நேற்று முன் தினம் இரவு, அம்பத்துார் தொழிற்பேட்டை, டாஸ்மாக் 'பார்' அருகே, அஜய்யை மடக்கி பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் மேற்கண்ட வழிப்பறிகளில் ஈடுபட்டது உறுதியானது.
நேற்று காலை அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, இரண்டு இரு சக்கர வாகனங்கள், எட்டு மொபைல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

