/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்மாற்றிக்கு ஆயில் நிரப்பும் போது அனல் மின் நிலையத்தில் தீ விபத்து
/
மின்மாற்றிக்கு ஆயில் நிரப்பும் போது அனல் மின் நிலையத்தில் தீ விபத்து
மின்மாற்றிக்கு ஆயில் நிரப்பும் போது அனல் மின் நிலையத்தில் தீ விபத்து
மின்மாற்றிக்கு ஆயில் நிரப்பும் போது அனல் மின் நிலையத்தில் தீ விபத்து
ADDED : செப் 23, 2025 12:22 AM

சென்னை:புதிதாக அமைந்து வரும் எண்ணுார் சிறப்பு பொருளாதார மண்டல மிக உய்ய அனல் மின்நிலைய திட்ட பணிகளுக்காக, மின்மாற்றியில் ஆயில் நிரப்பும் போது தீ விபத்து ஏற்பட்டது.
மீஞ்சூர் அடுத்த வாயலுாரில், எண்ணுார் சிறப்பு பொருளாதார மண்டல மிக உய்ய அனல் மின் திட்டத்திற்கான கட்டுமான பணி நடைபெறுகிறது.
இங்கு, இரண்டு அலகுகளில், 1,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான கட்டுமான பணி நடந்து வருகிறது.
கடந்த 12ம் தேதி, தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், அனல் மின்நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்து, அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகளை முடித்து, மின் உற்பத்தியை துவக்க வேண்டும் என, அறிவுறுத்தினார்.
நேற்று, மின் உற்பத்திக்கான கட்டுமான பணிகளின் ஒரு பகுதியாக மின்மாற்றிகள் பொருத்தப்பட்டு, அவற்றில் ஆயில் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, டேங்கர் லாரியில் இருந்து, மின்மாற்றிக்கு ஆயில் நிரப்பும்போது திடீரென தீப்பிடித்தது.
எளிதில் தீப்பற்றக்கூடிய ஆயில் என்பதால், தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால், அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது. அருகே உள்ள ஊரணம்பேடு, செங்கழனீர்மேடு, வாயலுார் கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த வடசென்னை அனல் மின்நிலையங்கள் மற்றும் எண்ணுாரில் இருந்து, மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், துரிதமாக செயல்பட்டு அடுத்தடுத்து தீ பரவாமல் கட்டுப்படுத்தியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில் மின்மாற்றி, டேங்கர் லாரி மற்றும் மின் தளவாடங்கள் ஆகியவை தீயில் எரிந்து நாசமாகின. இதுகுறித்து, காட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.