/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திறக்கப்படாத உடற்பயிற்சி கூடம் தி.மு.க., கவுன்சிலர் புகாரால் பரபரப்பு
/
திறக்கப்படாத உடற்பயிற்சி கூடம் தி.மு.க., கவுன்சிலர் புகாரால் பரபரப்பு
திறக்கப்படாத உடற்பயிற்சி கூடம் தி.மு.க., கவுன்சிலர் புகாரால் பரபரப்பு
திறக்கப்படாத உடற்பயிற்சி கூடம் தி.மு.க., கவுன்சிலர் புகாரால் பரபரப்பு
ADDED : டிச 20, 2025 06:00 AM
சென்னை: 'சென்னையில் உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டும் திறக்கப்படாமல் உள்ளது' என, சென்னை மாநகராட்சி கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. ''அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மேயர் பிரியா உறுதி அளித்தார்.
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம், மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், 62வதுவார்டு தி.மு.க., கவுன்சிலர்,ஜெகதீசன் பேசியதாவது:
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில், என் வார்டான 62ல், 2023ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் உடற்பயிற்சிக்கூடம் ஒன்று கட்டப்பட்டது. இதுவரை திறக்கப்படவில்லை. அதிகாரிகள் முறையாக பதிலளிப்பதும் இல்லை. இதனால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
அதற்கு பதிலளித்த மாநகராட்சி கமிஷனர் குமர குருபரன், ''கவுன்சிலர்கள் உள்ளூர் பிரச்னைகளை, திறந்த மனதுடன் கூறுங்கள். முடிந்த பணிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவராமல் இருப்பது தவறு. அதிகாரியின் பெயரை வெளிப்படையாக சொல்லுங்கள். அவரை, 'சஸ்பெண்ட்' செய்கிறோம்'' என்றார்.
அப்போது, மண்டல குழு தலைவர் சிற்றரசு பேசுகையில், ''மாநகராட்சி உதவி இன்ஜினியர்கள் உட்பட எந்த அதிகாரிகளும், கவுன்சிலர் ஜெகதீசன் பேச்சை கேட்பதில்லை என, அவர் தொடர்ந்து கூறுகிறார். அவரை திட்டமிட்டு அதிகாரிகள் புறக்கணிக்கின்றனர்,'' என்றார்.
மேயர் பிரியா பதில் அளிக்கையில், ''வார்டுகளில் நடக்கும் பணிகளில், அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்ற தகவலை, கமிஷனரின் கவனத்துக்கு கொண்டு வந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
தி.மு.க. கவுன்சிலர் சுதா தீனதயாளன் பேசுகையில், ''என் வார்டு 95ல், ஆறு மாதங்களுக்கு முன் உடற்பயிற்சி கூடம் அமைக்க பூஜை போடப்பட்டது. அதன்பின் எந்தவித கட்டுமான பணிகளும் நடக்கவில்லை,'' என்றார்.
இதனால், அதிர்ச்சியடைந்த மேயர் பிரியா, ''நானும் அந்த பூஜையில் பங்கேற்றேன். ஏன், இன்னும் பணிகள் துவங்கவில்லை,'' என, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
அடுத்து, 114வது வார்டு தி.மு.க., கவுன்சிலரும், மண்டல குழு தலைவருமான மதன்மோகன், பேசுகையில், ''புதிய பெயர் சூட்டப்பட்ட தெருக்களில் வசிப்பவர்களின் ஆவணங்களில் முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்,'' என்றார். ''சிறப்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மேயர் உறுதி அளித்தார்.

