/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ராட்வைலர், பிட்புல்' நாய்கள் வளர்க்க தடை: மீறினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க முடிவு
/
'ராட்வைலர், பிட்புல்' நாய்கள் வளர்க்க தடை: மீறினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க முடிவு
'ராட்வைலர், பிட்புல்' நாய்கள் வளர்க்க தடை: மீறினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க முடிவு
'ராட்வைலர், பிட்புல்' நாய்கள் வளர்க்க தடை: மீறினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க முடிவு
UPDATED : டிச 20, 2025 07:56 AM
ADDED : டிச 20, 2025 06:01 AM

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 'ராட்வைலர், பிட்புல்' நாய்களை, புதிதாக வளர்க்க தடை விதித்து, மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீறுபவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, நேற்று நடந்த சென்னை மாந கராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
'பிட்புல், ராட்வைலர் இன நாய்களின் ஆக்ரோஷமான குணநலன்களால், பொதுமக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இந்த இரு வகை நாய்களுக்கு, இன்று முதல் புதிதாக உரிமம் கோரி விண்ணப்பிக்க தடை விதிக்கப்படுகிறது.
அதற்கு, புதிதாக உரிமம் வழங்குவதும் நிறுத்தப்படுகிறது. ஏற்கனவே, வளர்பதற்கு உரிமம் பெற்றவர்கள், அவற்றை வெளியே அழைத்து செல்லும்போது, கழுத்துப்பட்டை, வாய்க்கவசம் அணிவிப்பது கட்டாயம். இதை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 'பிட்புல், ராட்வைலர்' இன நாய்களின் ஆண்டு உரிமத்தை புதுப்பிக்க தடை விதிக்கப்படுகிறது.
இன்று முதல் 'பிட்புல், ராட்வைலர்' நாய் இனங்களை, புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
முக்கிய தீர்மானங்கள் சென்னையில் மழைநீரை அகற்ற வைக்கப்பட்ட 411 மோட்டார் பம்புகளுக்கு, 5.96 லட்சம் லிட்டர் டீசல் போடப்பட்டு 5.50 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது
மணலியில் உள்ள 10 மெட்ரிக் டன் கொள்ளளவுடைய எரிஉலை நிலையம் நிரந்தரமாக மூடப்படும். பழுதுபார்க்கும் பணிக்காக வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது
சென்னையில் சாலையோர வியாபாரிகளுக்கு, 3,000 ரூபாய், அதாவது மாதம் 250 ரூபாய் கட்டணம் நிர்ணயம்
மந்தைவெளி பாக்கம், நார்ட்டன் 3வது தெருவுக்கு, திருச்சி லோகநாதன் பெயர் சூட்ட அனுமதி
மாநகராட்சி பள்ளிகளில், 10, பிளஸ் 2 மாணவ - மாணவியருக்கு, மாலை நேர சிறப்பு வகுப்புகளின் போது, சுண்டல் வழங்கப்படும்
மீட்கப்படும் தெருநாய்கள் நிரந்தர பராமரிப்புக்காக தனியார் காப்பகங்கள், தன்னார்வலர்களிடம் ஒப்படைக்க அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக, நாய் ஒன்றுக்கு 50 ரூபாய் உணவு செலவாக வழங்கப்படும். பராமரிப்பாளருக்கு, 750 ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.
இவைகள் உட்பட 110 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பா.ஜ., வெளிநடப்பு
மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றத்துக்கு காங்., கவுன்சிலர் சாமுவேல் திரவியம் கண்டனம் தெரிவித்தார்
அம்பத்துார் துாய்மை பணியாளர் விவகாரம் தொடர்பாக, பேச வாய்ப்பு வழங்கவில்லை என கண்டித்து, தமிழக பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் வெளிநடப்பு செய்தார்.

