/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குளத்தில் நீர் வற்றுவதை தடுக்க களிமண் கொட்டும் பணி துவக்கம்
/
குளத்தில் நீர் வற்றுவதை தடுக்க களிமண் கொட்டும் பணி துவக்கம்
குளத்தில் நீர் வற்றுவதை தடுக்க களிமண் கொட்டும் பணி துவக்கம்
குளத்தில் நீர் வற்றுவதை தடுக்க களிமண் கொட்டும் பணி துவக்கம்
ADDED : அக் 25, 2024 12:36 AM

பூந்தமல்லி, பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே, வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம் ஆகிய மூன்று இடங்களில் உள்ள பெருமாளும், ஒருசேர இக்கோவிலில் காட்சியளிக்கின்றனர்.
இக்கோவிலின் எதிரே, தீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்தைச் சுற்றி கட்டடங்கள் அதிகரித்து, நீர்வரத்து கால்வாய்கள் அடைபட்டுள்ளன. இதனால், குளம் ஆண்டு முழுதும் வறண்டு காணப்படுகிறது.
தண்ணீர் இல்லாததால், குளத்தில் செய்ய வேண்டிய பாரம்பரிய நிகழ்வுகள் தொடர்ந்து தடைபட்டு வருகின்றன. இந்நிலையில், 70 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த வைகாசி மாதம் தீர்த்தவாரி உற்சவம் இக்குளத்தில் நடத்தப்பட்டது.
அப்போது, டேங்கர் லாரிகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் கொண்டு வந்து ஊற்றியும், குளத்தில் நீர் விரைவாக வற்றியது. குளத்தில் தரைதளத்தில் உள்ள மண், நீரை அதிகம் உறிஞ்சும் தன்மையுடன் உள்ளதால், இதை சரிசெய்ய கோவில் நிர்வாகத்தினர் திட்டமிட்டனர்.
இதையடுத்து வேறு இடத்தில் இருந்து களி மண்ணை கொண்டு வந்து, குளத்தின் உள்ளே கொட்டி சமன் செய்யும் பணிகள், நேற்று துவங்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:
களிமண் தண்ணீரை எளிதில் உறிஞ்சாமல், நீண்ட நாள் தேக்கி வைக்கும் திறன் கொண்டது. எனவே, சோதனை முறையில் களிமண்ணை குளத்தில் கொட்டி சமன் செய்து வருகிறோம்.
இதனால், வரும் மழைக்காலத்தில் குளத்தில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

