/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடமை தவறிய அதிகாரிகளுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பு
/
கடமை தவறிய அதிகாரிகளுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பு
கடமை தவறிய அதிகாரிகளுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பு
கடமை தவறிய அதிகாரிகளுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பு
ADDED : பிப் 28, 2024 12:37 AM
சென்னை, அனுமதியின்றி கட்டுமானத்தை துவக்கிய தனியார் மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறிய, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், சென்னை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை, ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில், எம்.ஜி.எம்., மருத்துவமனை கட்டுமான பணி துவங்கியது. அஸ்திவாரம் அமைக்கும் பணியில், அதிகளவில் ஒலி மாசு ஏற்படுவதாக, மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், வழக்கு தொடர்ந்தார்.
விசாரணையின் போது, கட்டுமான பணிக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை என, சி.எம்.டி.ஏ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கட்டுமான பணி மேற்கொள்ள உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில், நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், ஆர்.சக்திவேல் அமர்வில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டுமான பணிகளுக்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, சி.எம்.டி.ஏ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திட்ட அனுமதி பெறாமல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதித்து கடமை தவறி விட்டதாக, அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
தற்போது, அனுமதி வழங்கப்பட்டதால், ஏற்கனவே விதித்த தடையை நீக்கி, திட்ட அனுமதியின்படி கட்டுமானம் மேற்கொள்ளும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதிகாரிகள் கடமை தவறியதற்காக, சி.எம்.டி.ஏ.,க்கு 5 லட்சம் ரூபாய்; சென்னை மாநகராட்சிக்கு, 5 லட்சம் ரூபாய்; மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, 2 லட்சம் ரூபாய்; மருத்துவமனை நிர்வாகத்துக்கு 25 லட்சம் ரூபாய் என, அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு இந்த தொகையை செலுத்தவும், மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்து, சி.எம்.டி.ஏ., மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம், 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டனர்.

