/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செம்பாக்கம் ஏரிக்கு ரூ.10 கோடியில் திட்டம் தயாரிப்பு துார்வாரி ஆழப்படுத்த நலச்சங்கத்தினர் கருத்து
/
செம்பாக்கம் ஏரிக்கு ரூ.10 கோடியில் திட்டம் தயாரிப்பு துார்வாரி ஆழப்படுத்த நலச்சங்கத்தினர் கருத்து
செம்பாக்கம் ஏரிக்கு ரூ.10 கோடியில் திட்டம் தயாரிப்பு துார்வாரி ஆழப்படுத்த நலச்சங்கத்தினர் கருத்து
செம்பாக்கம் ஏரிக்கு ரூ.10 கோடியில் திட்டம் தயாரிப்பு துார்வாரி ஆழப்படுத்த நலச்சங்கத்தினர் கருத்து
ADDED : பிப் 09, 2024 12:32 AM

செம்பாக்கம், தாம்பரம் மாநகராட்சி எல்லையில், செம்பாக்கம் ஏரி உள்ளது. இதன் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, குடியிருப்புகளாக மாறிவிட்டன.
மற்றொரு புறம், கழிவுநீர் கலப்பதால், தண்ணீர் நிறம் மாறி, கெட்டுவிட்டது. குப்பையும் கொட்டப்படுகிறது.
பல ஆண்டுகளாக நிலவும் இப்பிரச்னைக்கு தீர்வாக, செம்பாக்கம் ஏரியை மீட்டு, முறையாக பராமரிக்க வேண்டும் என, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், சி.எம்.டி.ஏ., நிதி, 10 கோடி ரூபாய் செலவில், இந்த ஏரி சீரமைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் கருத்துக் கேட்பு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம், சிட்லப்பாக்கம் சர்வமங்களா நகர் பூங்காவில், சமீபத்தில் நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆனால், சி.எம்.டி.ஏ., மற்றும் பொதுப்பணித் துறை சார்பில் ஒருவர் கூட பங்கேற்று, ஏரி சீரமைப்பு திட்டம் குறித்து விவரிக்கவில்லை.
தொடர்ந்து, கரையில் அமையவுள்ள பூங்கா, சிற்றுண்டி உணவகம், சாய்வு நாற்காலி, நடைபாதையை அழகுபடுத்துதல் ஆகியவற்றை, தனியார் நிறுவனத்தினர் திரைக்காட்சி வாயிலாக விளக்கினர். பின், குடியிருப்போர் நலச்சங்கத்தினர், தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
சர்வமங்களா நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
செம்பாக்கம் ஏரியை முழுதாக அளந்து, எல்லைக்கல் பதித்து பாதுகாக்க வேண்டும். தற்போது, ஏரியில் கலக்கப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து விட வேண்டும்.
மழைநீர் வரும் பாதையான மேற்கில், தனியார் அமைப்பு சார்பில் கரை அமைக்கப்பட்டது. அப்போது, எடுக்கப்பட்ட மண்ணை ஏரியினுள், 100 அடி அகலத்திற்கு கொட்டி மூடிவிட்டனர். அந்த மண்ணை அகற்றி, ஏரியை பகுதியை மீட்டு, விரிவுபடுத்த வேண்டும்.
ஏரியின் கொள்ளளவு, 2018ல், 10.5 அடியாக இருந்தது. தற்போது, 5.2 அடியாக உள்ளது. அதனால், துார்வாரி, ஆழப்படுத்த வேண்டியது அவசியம்.
மேற்குப் பகுதியில் மழைநீர் பாதை சுருங்கிவிட்டது. அதை அகலப்படுத்தி, மழைநீர் தடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
ஏரியினுள் உள்ள குப்பைக் கிடங்கை அகற்ற வேண்டும். விளையாட்டு உபகரணங்கள், சிற்றுண்டி இதுபோன்ற எந்த வசதியும் தேவையில்லை. நடைபாதையை கட்டி, ஏரியை முறையாகபராமரித்தாலே போதும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

