/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கணவர் ஆணவ கொலையால் வேதனை தற்கொலைக்கு முயன்ற மனைவி மரணம்
/
கணவர் ஆணவ கொலையால் வேதனை தற்கொலைக்கு முயன்ற மனைவி மரணம்
கணவர் ஆணவ கொலையால் வேதனை தற்கொலைக்கு முயன்ற மனைவி மரணம்
கணவர் ஆணவ கொலையால் வேதனை தற்கொலைக்கு முயன்ற மனைவி மரணம்
ADDED : ஏப் 24, 2024 12:49 AM

பள்ளிக்கரணை, பள்ளிக்கரணையில் சாதி வெறியால் ஆணவக்கொலை செய்யப்பட்ட வாலிபரின் மனைவி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேடவாக்கம் அடுத்த, பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன், 24. மோட்டார் மெக்கானிக். இவரும் ஜல்லடியன்பேட்டை கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த, ஷர்மிளா என்ற பெண்ணும் மூன்று ஆண்டுகளாக காதலித்தனர்.
பிரவீன் வேறு சாதி என்பதால், ஷர்மிளா வீட்டில் காதலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், எழும்பூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில், கடந்த 2023, நவம்பரில் பிரவீன்-, ஷர்மிளா இருவரும் பதிவுத் திருமணம் செய்து, பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவில் வசித்து வந்தனர்.
தன் தங்கை வேறு சாதி நபரை திருமணம் செய்தது பொறுக்காத ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ், 26, கடந்த பிப். 23ல், தன் நண்பர்களுடன் சேர்ந்து, பிரவீனை வெட்டி கொலை செய்தார்.
காதல் கணவர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பின், மாமனார், மாமியாருடன் வசித்து வந்த ஷர்மிளா, தொடர்ந்து மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி மின்விசிறி கொக்கியில் துாக்கிட்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஆபத்தான நிலையில் ஷர்மிளாவை மீட்ட உறவினர்கள், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சம்பவம் குறித்த தகவல்படி பள்ளிக்கரணை போலீசார் ஷர்மிளா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்தனர்.
நேற்று காலை ஷர்மிளாவின் அறையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, தற்கொலை செய்துகொள்வதற்கு முன் ஷர்மிளா எழுதி வைத்த கடிதம் கிடைத்துள்ளது.
அதில் 'பிரவீன் இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. நான் சாகப் போறேன். பிரவீனை என்னிடம் இருந்து பிரித்துவிட்டனர். அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம். நான் பிரவீனிடம் போகிறேன்' என உருக்கமாக அந்த கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.

