/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் வனத்துறை அறிக்கை அளிக்க உத்தரவு
/
மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் வனத்துறை அறிக்கை அளிக்க உத்தரவு
மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் வனத்துறை அறிக்கை அளிக்க உத்தரவு
மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் வனத்துறை அறிக்கை அளிக்க உத்தரவு
ADDED : மே 22, 2024 12:04 AM
சென்னைகொளத்துார் 200 அடி ஜவஹர்லால் நேரு சாலையில், நெடுஞ்சாலைத் துறையால் மரங்கள் வெட்டப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக வனத்துறைக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சாலை விரிவாக்கப் பணிகளுக்கு கொளத்துார், செந்தில் நகர், 200 அடி ஜவஹர்லால் நேரு சாலையில் மரங்கள் வெட்டப்படுவதை தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும் என, சென்னையைச் சேர்ந்த எட்வின் உதயகுமார் என்பவர், பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாயம், 'மரங்களை வெட்ட, மாவட்ட பசுமை குழு ஒப்புதல் அளித்ததா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, சென்னை கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட்டது.
அதன்படி, நெடுஞ்சாலைத் துறை தாக்கல் செய்த அறிக்கையில்,'கொளத்துார் 200 அடி ஜவஹர்லால் நேரு சாலையில் ஐந்து மரங்களை வெட்டவும், ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில் நடவும், மாவட்ட பசுமை குழு அனுமதி அளித்தது.
வெட்டப்படும் ஆறு மரங்களுக்காக, 60 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும், பசுமை குழு உத்தரவிட்டது' என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் அருண்குமார் வர்மா ஆகியோர், 'வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக 60 மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மேம்பாலம் கட்ட, பசுமை குழு அனுமதி அளித்துள்ளது என, நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.
'இது தொடர்பாக, தமிழக வனத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை, வரும் ஜூலை 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

