/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு தோறும் கருப்பு கொடி அகற்ற மறுக்கும் சூளைவாசிகள்
/
வீடு தோறும் கருப்பு கொடி அகற்ற மறுக்கும் சூளைவாசிகள்
வீடு தோறும் கருப்பு கொடி அகற்ற மறுக்கும் சூளைவாசிகள்
வீடு தோறும் கருப்பு கொடி அகற்ற மறுக்கும் சூளைவாசிகள்
ADDED : மார் 31, 2024 02:12 AM

சூளை:சூளை, தட்டான்குளம் பகுதி, அங்காளம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் என, ஹிந்து சமய அறநிலையத் துறை கூறியது. இதை கண்டித்து, அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி, நுாதன எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய சென்னை தி.மு.க., வேட்பாளர் தயாநிதி, அப்பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதை முன்னிட்டு, தேர்தலை காரணம் காட்டி மாநகராட்சி அதிகாரிகள் கருப்புக்கொடியை அகற்ற சென்றனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பகுதி மக்கள் கூறியதாவது:
ஜனநாயக ரீதியாக கட்சி சார்பற்ற முறையில், அனைத்து வேட்பாளரும் ஓட்டு சேகரிக்க வருவதை முன்னிட்டு, அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் தான், கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளதே தவிர, ஒரு கட்சியின் வேட்பாளருக்காக, பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
மாநாகராட்சி ஊழியர்கள் கருப்புக்கொடி அகற்ற வந்தபோது, அதற்கான உத்தரவு உள்ளதா; அப்படி தேர்தல் கமிஷன் உத்தரவு இருந்தால் தாராளமாக அகற்றலாம்' என்றோம். பதில் கூறாமல் மாநகராட்சி ஊழியர்கள் மவுனமாக சென்று விட்டனர்.
எங்கள் பகுதி மக்களின் ஜனநாயக கோரிக்கையை ஏற்கும் வரை, தொடர் போராட்டம் நடைபெறும். இப்பிரச்னை தொடர்பாக எங்களை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் பெண்களை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
கருப்புக்கொடி அகற்றுவது தொடர்பாக, பகுதி மக்களிடம் தாசில்தார் பேச்சு நடத்தி வருகிறார்.
சூளை தட்டான்குளம் பகுதியில் உள்ள வீடுகளில் ஏற்றப்பட்டுள்ள கருப்பு கொடிகள்.

