ADDED : ஜூலை 16, 2024 12:37 AM
ஓட்டேரி, மும்பை, தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிர்மா, 59. இவர் கடந்த 12ம் தேதி மும்பையில் இருந்து குடும்பத்துடன் சென்னை வந்தார்; பட்டாளம் பகுதியில் உள்ள சாந்தி பவனில் அறை எடுத்து தங்கினார்.
அறையில் கைப்பை ஒன்றில் அனைவரது நகைகளையும் கழற்றி வைத்துவிட்டு, மாதவரத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றனர். மீண்டும் அறைக்கு வந்து நகைகளை பார்த்த போது, நகை மற்றும் 1,500 ரூபாயை காணவில்லை.
இது குறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் நிர்மா புகார் அளித்தார். 'சிசிடிவி' காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்தனர். சாந்தி பவனில் காவலராக பணியாற்றும் மேஷராக் என்பவரின் மகன், வியாசர்பாடியைச் சேர்ந்த இளவரசன், 37, என்பவர் நகைகளை திருடியது தெரியவந்தது.
விசாரணையில், 12ம் தேதி மது போதையில் சாந்தி பவன் வந்த இளவரசன், நிர்மா தங்கியிருந்த அறையை திறந்து 51 சவரன் நகைகளை திருடியது தெரிய வந்தது.
நகைகளை மீட்ட போலீசார், இளவரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

