/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தமிழகத்தில் ராவணன் ஆட்சி தினகரன் கடும் தாக்கு
/
தமிழகத்தில் ராவணன் ஆட்சி தினகரன் கடும் தாக்கு
ADDED : ஜூலை 23, 2024 12:20 AM

சென்னை, ''தமிழகத்தில் ராவணன் ஆட்சி நடக்கிறது,'' என, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் கூறினார்.
மின் கட்டணம் மற்றும் வரி உயர்வை கண்டித்து, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பிறகு தினகரன் அளித்த பேட்டி:
அனல் மின் உற்பத்தி நிலையங்கள், சூரிய ஒளி மின் சக்தி, காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களை முறைப்படுத்தினாலே, தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், 50 சதவீதம் மின்சாரமே உற்பத்தியாகிறது.
மீதியை தனியாரிடம் வாங்குவதால், ஊழலுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மக்கள் தலையில் மாதம் 5,400 கோடி ரூபாய் வரியாக சுமத்துகின்றனர். மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்வதாகக் கூறினர். அதை செய்யவில்லை.
மத்திய அரசு நலிவடைந்த மின் வாரியத்திற்கு மானியம் கொடுத்து, அதை சரி செய்ய பல திட்டங்களை கூறியுள்ளனர். அதை செய்வதை விடுத்து, அத்திட்டத்தில் சேருவதற்காக கட்டணத்தை உயர்த்துவதாக பொய் கூறுகின்றனர்.
தமிழகத்தில் ராவணன் ஆட்சி நடக்கிறது. ஏற்கனவே ஆட்சியில் இருந்த பழனிசாமி செய்த தவறான நிர்வாகம் மற்றும் ஊழலால், தி.மு.க., ஆட்சி பொறுப்புக்கு வந்தது.
தற்போது மக்கள் விரோத, கூலிப்படைகள், போதை பழக்கம் பெருகி உள்ள ஆட்சி நடக்கிறது. கைதாகும் நபர்கள், சரணடைபவர்கள் 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களாக உள்ளனர். போதை வியாபார பின்னணியில், ஆளும் கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.
எனவே, இந்த ஆட்சி ராவணன் ஆட்சி என்றுதான் கூற முடியும். எதிர்க்கட்சிகள் ஒன்றிணையாமல் செய்வது தி.மு.க.,தான். பழனிசாமியை மிரட்டி, தனியாக தி.மு.க., நிற்க வைத்துள்ளது. தி.மு.க.,வின் 'பி டீமாக' பழனிசாமி உள்ளார்.
இவ்வாறு, அவர் கூறினார்.

