/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரண்டாம் கட்ட மெட்ரோ விரிவாக்க திட்டம் கிளாம்பாக்கம் - சிறுசேரி நீட்டிப்பு இல்லை
/
இரண்டாம் கட்ட மெட்ரோ விரிவாக்க திட்டம் கிளாம்பாக்கம் - சிறுசேரி நீட்டிப்பு இல்லை
இரண்டாம் கட்ட மெட்ரோ விரிவாக்க திட்டம் கிளாம்பாக்கம் - சிறுசேரி நீட்டிப்பு இல்லை
இரண்டாம் கட்ட மெட்ரோ விரிவாக்க திட்டம் கிளாம்பாக்கம் - சிறுசேரி நீட்டிப்பு இல்லை
ADDED : மே 08, 2024 12:17 AM
சென்னை, 'சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ விரிவாக்க திட்டத்தில், கிளாம்பாக்கம் - சிறுசேரி மெட்ரோ நீட்டிப்பு திட்டம் கைவிடப்படுகிறது' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவாக்கத்தில், சிறுசேரி - கிளாம்பாக்கம்; பூந்தமல்லி - பரந்துார்; கோயம்பேடு - ஆவடிக்கு மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பது குறித்து, தனியார் நிறுவனங்கள் வாயிலாக சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு, தமிழக அரசிடம் வழங்கப்பட்டது.
இதையடுத்து, தமிழக அரசின் ஒப்புதலை தொடர்ந்து, கோயம்பேடு - ஆவடி, பூந்தமல்லி - பரந்துாருக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், பயணியர் போதிய அளவில் இல்லாததால், கிளாம்பாக்கம் - சிறுசேரி மெட்ரோ நீட்டிக்கும் திட்டம் கைவிடப்படுவதாக, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
அடுத்த 30 ஆண்டுகளை கணக்கிட்டு, 'பீக் ஹவர்'களில் ஒரு மணி நேரத்தில், 14,000த்திற்கும் மேற்பட்டோர் பயணிக்க வேண்டும்.
கோயம்பேடு - ஆவடிக்கு 20,000 பேரும், தற்போது நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில், 22,000 பேரும் பயணிக்க, நெரிசல் இருப்பது தெரிந்துள்ளது.
ஆனால், சிறுசேரியில் இருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு திட்டத்தில்,'பீக் ஹவர்' பயணியர் எண்ணிக்கை 5,000த்தை தாண்டவில்லை.
இதனால், இந்த திட்டம் கைவிடப்படுகிறது. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவைக்கு, மக்களின் வரவேற்பு மிகக் குறைவாகவே இருக்கும் என, சாத்தியக்கூறு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்த வழித்தடத்தை ஒட்டி போதிய கல்வி நிறுவனங்களோ, அலுவலகங்களோ இல்லை என்பதும் தெரிந்துள்ளது. அதே நேரத்தில், இதை மாற்று வழியில் நீட்டிப்பது குறித்து, தமிழக அரசு முடிவு எடுக்கும்.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்கள் வேகம், மணிக்கு 32 கி.மீ.,யாக இருக்கும். முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துடன் ஒப்பிடுகையில், சற்று குறைவாக தான் இருக்கும்.
ஆனாலும், பயண நேரம் அதிகரிக்க வாய்ப்பு இல்லை. அதிக வளைவுகள், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே குறுகிய தொலைவு தான் இதற்கு காரணம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

