/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை வந்துள்ள எம்.எஸ்., 'சொகுசு கப்பல்'
/
சென்னை வந்துள்ள எம்.எஸ்., 'சொகுசு கப்பல்'
ADDED : ஏப் 26, 2024 12:36 AM

சென்னை, நாட்டில் உள்ள பெரிய 12 துறைமுகங்களில் மூன்றாவதாக, சென்னை துறைமுகம் திகழ்கிறது. இந்த துறைமுகத்தில் 24 கப்பல்கள் நிறுத்தும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
ஆண்டு ஒன்றுக்கு அதிகபட்சமாக 61 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. மத்திய அரசின் 'சாகர்மாலா' திட்டத்தின் வாயிலாக, கடல்சார் துறையை மேம்படுத்தும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற இந்திய கடல்சார் மூன்றாவது உச்ச மாநாட்டில், இந்திய கப்பல் போக்குவரத்து மேம்பாடு மற்றும் துறைமுகங்கள் மேம்படுத்துவது குறித்து ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுற்றுலா கப்பல் சென்னை துறைமுகம் வந்து செல்ல, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய அமெரிக்காவில் இருக்கும் பனாமா நாட்டைச் சேர்ந்த எம்.எஸ். 'தி ேவர்ல்டு' என்ற பயணியர் சுற்றுலா சொகுசு கப்பல், 280 பணியாளர்கள் மற்றும் 89 பயணியருடன் சென்னை துறைமுகத்திற்கு நேற்று முன்தினம் வந்துள்ளது.
12 அடுக்குகள் கொண்ட இந்த பிரமாண்ட கப்பலில், 106 தனித்தனி அறைகள், 19 ஸ்டுடியோ குடியிருப்புகள் மற்றும் 40 ஸ்டூடியோக்கள், ஐந்து உணவகங்கள், ஆரோக்கிய ஸ்பா, சந்திப்பு கூட்டஅறைகள், ஷோரூம், நுாலகம், திரைப்பட அரங்கம், பெரிய ஹால், மதுக்கூடங்கள், ஓய்வறைகள்.
நீச்சல் குளம், சூரிய குளியல் பகுதி, டென்னிஸ் மற்றும் கோல்ப் விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி நிலையம் இடம் பெற்றுள்ளன.
இந்த கப்பலில் வந்த வெளிநாடுகளைச் சேர்ந்த 89 சுற்றுலா பயணியர் மயிலாப்பூர், ஜார்ஜ் டவுன், மாமல்லபுரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிடுகின்றனர்.
இலங்கையில் உள்ள திருகோணமலை வழியாக சென்னை துறைமுகம் வந்துள்ள இந்த சொகுசு சுற்றுலா கப்பல், இன்று விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டுச் செல்ல உள்ளதாக, சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்தார்.

