/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
4 வயது மகனை கொன்றவருக்கு 10 ஆண்டு சிறை
/
4 வயது மகனை கொன்றவருக்கு 10 ஆண்டு சிறை
ADDED : ஏப் 26, 2024 12:35 AM
சென்னை, தேனாம்பேட்டை, ஜெயம்மாள் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஊர்மிள் எஸ்.டோலியா, 45. இவர், வடபழனி பி.டி.ராஜன் சாலையில், 'எம்.ஆர்.சர்வீஸ்' என்ற மொபைல் போன் சர்வீஸ் கடையை, குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார்.
வியாபாரம் சரிவர நடக்காததால், மன உளைச்சலில் இருந்தவர், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து உள்ளார்.
பின், கடந்த 2018 மார்ச் 16ல், தேனாம்பேட்டையில் உள்ள கடைக்கு, இரவு தன் நான்கு வயதான 2வது மகன் மாதவ் யு டோலியாவை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சென்ற அவர், மகனின் கை மணிக்கட்டை கத்தியால் அறுத்து, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் மாதவ் இறக்க, ஊர்மிள் உயிர் பிழைத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, ஊர்மிள் எஸ்.டோலியா மீது, கொலை, தற்கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ், வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணை, சென்னை கலெக்டர் வளாகத்தில் உள்ள 16வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கு.புவனேஸ்வரி முன் நடந்தது. போலீசார் தரப்பில், மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.மகாராஜன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
கொலை குற்றப்பிரிவின் கீழ் குற்றவாளி இல்லை' என, இந்த நீதிமன்றம் முடிவு செய்த நேரத்தில், மன உளைச்சல் காரணமாக, தன் மகனுக்கு மரணத்தை விளைவிக்கும் குற்றத்தையும், தற்கொலை முயற்சியும் ஊர்மிள் எஸ்.டோலியா செய்துள்ளார் என்பது சூழ்நிலை சாட்சியங்கள் அடிப்படையில், உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, மரணம் விளைவிக்கும் குற்றத்துக்கு 10 ஆண்டும், 2,000 ரூபாய் அபராதமும், தற்கொலை முயற்சிக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.
இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தீர்ப்பளித்தார்.

