/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.13 கோடி மதிப்பில் வடிகால் பணி துவக்கம்
/
ரூ.13 கோடி மதிப்பில் வடிகால் பணி துவக்கம்
ADDED : ஏப் 22, 2024 01:23 AM

செங்குன்றம்:தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கி சுருங்கிய சோத்துப்பாக்கம் சாலையில், 13 கோடி ரூபாய் மதிப்பில், புதிய மழைநீர் வடிகால் பணி துவங்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்குன்றம், ஜி.என்.டி., சாலை சந்திப்பு முதல் தீர்த்தகிரையம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட, சோத்துப்பாக்கம் சாலையின் இரு பக்கமும், '2.4 கி.மீ., துாரத்திற்கு, 13 கோடி ரூபாய் மதிப்பில், புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, சில நாட்களுக்கு முன் துவங்கியது.
அந்த வடிகால், 7 அடி அகலம், 7 அடி ஆழம் கொண்டதாக அமைக்கப்படுகிறது. பணி நடக்கும், 40 அடி அகலம் கொண்ட சோத்துப்பாக்கம் சாலை, நாரவாரிக்குப்பம் பேரூராட்சி மற்றும் தனியார் ஆக்கிரமிப்புகளால் 22 அடி சாலையாக சுருங்கி விட்டது.
கடை, தனியார் அரிசி ஆலை, பேருந்து சேவை மையம், தொழிற்சாலை மற்றும் கிடங்குகளால், 3 அடி முதல் 10 அடி அகலம் வரை, சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
அந்த சாலை மற்றும் அதையொட்டிய பகுதிகளுக்கு வந்து செல்லும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. அதனால், அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாக உள்ளது. சேதமடைந்த சாலையில், புழுதி மண்டலம் உருவாகி சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த சாலையையொட்டி வசிப்போர் மட்டுமின்றி, வாகன ஓட்டிகளும், கண்பார்வை பாதிப்பு, சுவாசக்கோளாறு ஆகியவற்றால், உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், அந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் வடிகால் அமைப்பதற்கான எல்லை குறித்து, மாநில நெடுஞ்சாலைத் துறை அடையாளமிட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு, மழைநீர் வடிகால், மூன்று மாதங்களில் அமைக்கப்படும் என, நெடுஞ்சாலைத்துறையினர் கூறினர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மேற்கண்ட சாலை ஆக்கிரமிப்புகளால், 'உயிர்' காக்கும் அவசர உதவிக்கான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், ஊர்ந்து செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது.
அதனால், அரசியல் செல்வாக்கு, வணிக வளாகம், பெரிய கட்டடம் என்ற பாரபட்சமின்றி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் வடிகால் அமைக்க, நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த சாலையில், தமிழ்நாடு மின் வாரிய அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம் ஆகியவை உள்ளன. அதனால், வடிகால் அமைக்கும் பணிக்கு முன், மரண சாலையாக உள்ள இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

