/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் பரவி வரும் காய்ச்சல் கட்டுப்படுத்த மாநகராட்சி மும்முரம்
/
சென்னையில் பரவி வரும் காய்ச்சல் கட்டுப்படுத்த மாநகராட்சி மும்முரம்
சென்னையில் பரவி வரும் காய்ச்சல் கட்டுப்படுத்த மாநகராட்சி மும்முரம்
சென்னையில் பரவி வரும் காய்ச்சல் கட்டுப்படுத்த மாநகராட்சி மும்முரம்
ADDED : ஜூலை 23, 2024 12:12 AM

ஆலந்துார், சென்னை, புறநகரில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் தட்பவெட்ப நிலை மாறி, சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்டவை பரவி வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக உள்ள கொசுக்கள் அதிகரிப்பு, கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பிரச்னைகளை கட்டுப்படுத்த, மாநகராட்சி தரப்பில் தீவிர நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னையில் பல இடங்களில் டெங்கு தொற்று, மர்ம காய்ச்சல் பரவலுக்கு கொசு உற்பத்தியே முக்கிய காரணமாக உள்ளது.
கோடம்பாக்கம் 138வது வார்டு எம்.ஜி.ஆர்., நகரில் எட்டு மாத குழந்தை மற்றும் 132வது வார்டில் எட்டு வயது சிறுவன் ஆகியோருக்கு, டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. ஆலந்துார், அடையாறு மண்டலங்களிலும் சிலருக்கு டெங்கு பாதிப்பு இருக்கிறது.
ஆனால், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார் ஆகிய மண்டலங்களிலும், தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளிலும் பலருக்கு சளி, இருமலுடன் மர்ம காய்ச்சல் இருப்பது தெரியவந்து உள்ளது.
இதை கட்டுப்படுத்தவும், பருவமழை துவங்கவுள்ள நிலையில் சுகாதாரம் பணியை முடுக்கி விடவும், மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், ஆலந்துார், பெருங்குடி மண்டலங்களில் வாரத்திற்கு ஒருமுறை குடிநீரின் மாதிரி சேகரித்து, குடிப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளதா, பாக்டீரியா, வைரஸ் தொற்று இருக்கிறதா என, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
குடிநீர் பிரச்னை அதிகமுள்ள திருவொற்றியூர், மணலி மண்டலங்களில் தினமும் குடிநீரின் தரம் பரிசோதிக்கப்படுகிறது. அண்ணா நகரில் அவ்வப்போதும், ஆவடியில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும் குடிநீரில் கழிவுநீர் கலந்து இருக்கிறதா என, ஆய்வு செய்யப்படுகிறது.
அதில் கிடைக்கும் முடிவுகளுக்கு ஏற்ப, குடிநீர் வாரியத்துடன் இணைந்து தொட்டிகள் சுத்தப்படுத்தப்பட்டு, தேவையான அளவு குளோரின் கலந்து, சுத்தமான குடிநீர் வழங்கும் நடவடிக்கையில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.
அதேபோல், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வரும் பகுதிகளில், கொசு ஒழிப்பு புகை அடிப்பது உள்ளிட்ட பணிகள், மாநகராட்சி வாயிலாக நடந்து வருகின்றன.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
ஆறு, ஓடை கரையோரங்களில் வசிப்போருக்கு கொசு வலை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டிலும் கை இயந்திரம் வாயிலாக, கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்படுகிறது.
மழைநீர் வடிகால் மூடிகள் திறக்கப்பட்டு, அதில் கொசு மருந்து அடிக்கும் பணியில், ஒவ்வொரு வார்டிலும், சுழற்சி முறையில் பணி நடக்கிறது. காலி மனைகளில் மழைநீர் தேங்கிய புதர் பகுதிகளில் 'ஆயில்' பந்து வீசப்பட்டு, லார்வா புழுக்கள் அழிக்கப்படுகின்றன.
கொசுத் தொல்லை அதிகம் இருப்பதாக புகார் அளிக்கப்படும் இடங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

