/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கன்டோன்மென்ட் விவகாரம் தொழிலாளர் சங்கத்தினர் எதிர்ப்பு
/
கன்டோன்மென்ட் விவகாரம் தொழிலாளர் சங்கத்தினர் எதிர்ப்பு
கன்டோன்மென்ட் விவகாரம் தொழிலாளர் சங்கத்தினர் எதிர்ப்பு
கன்டோன்மென்ட் விவகாரம் தொழிலாளர் சங்கத்தினர் எதிர்ப்பு
ADDED : ஏப் 15, 2024 01:53 AM

சென்னை:நாடு முழுதும் 62 கன்டோன்மென்ட் போர்டுகள் உள்ளன. இதில் 56 கன்டோன்மென்ட், மக்கள் பிரதிநிதிகளை கொண்டு செயல்படுகின்றன; மற்றவை ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளன.
தமிழகத்தில் சென்னை பரங்கிமலை- - பல்லாவரம் மற்றும் வெல்லிங்டன் ஆகிய கன்டோன்மென்ட் போர்டுகள் உள்ளன. பரங்கிமலை - பல்லாவரம் பகுதிகளில் ஏழு வார்டுகள் உள்ளன.
கடந்த, 2015ல் பரங்கிமலை கன்டோன்மென்ட் போர்ட்டுக்கு தேர்தல் நடந்தது. இதன் பதவிக்காலம் 2020 பிப்., மாதத்துடன் முடிந்தது.
தேர்தல் நடத்தக்கூடிய வகையில் பெண்களுக்கான வார்டுகள் பிரிக்கப்பட்டன. நிர்வாக காரணங்களுக்காக, கடந்த மூன்று ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், 2023, ஏப்., 30ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என, பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஆண்டு பிப்., 17ல் உத்தரவிட்டது. தேர்தல் பணிகள் துவக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் அரசாணை காரணமாக, தேர்தல் பணி நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே, நாட்டில் உள்ள ஒரு கன்டோன்மென்ட் போர்டு மட்டும், மாநில அரசுடன் இணைக்கப்பட்டது. மேலும், 10 கன்டோன்மென்ட் போர்டுகளை இணைக்க, வடமாநிலங்களில் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பரங்கிமலை- - பல்லாவரம் கன்டோன்மென்ட் போர்டு தொழிலாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், பல்லாவரத்தில் நடந்தது. தேசிய செயலர் ஸ்ரீகுமார், சங்க தலைவர் நடராஜன், பொதுச் செயலர் பாலகிருஷ்ணன் உட்பட 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், 'கன்டோன்மென்ட் போர்டு தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்; கன்டோன்மென்ட் போர்டுகளை மாநில அரசுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்' என்பது உள்ளிட்ட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில அரசுடன் கன்டோன்மென்ட் போர்டுகளை இணைத்தால், வளர்ச்சி திட்ட பணிகளுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காது உள்ளிட்ட காரணங்களை குறிப்பிட்டு, இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

