/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெரும்பாக்கத்தில் 32,000 ஓட்டு 'மிஸ்ஸிங்' விளக்கும் கேட்கும் தமிழக தேர்தல் அதிகாரி
/
பெரும்பாக்கத்தில் 32,000 ஓட்டு 'மிஸ்ஸிங்' விளக்கும் கேட்கும் தமிழக தேர்தல் அதிகாரி
பெரும்பாக்கத்தில் 32,000 ஓட்டு 'மிஸ்ஸிங்' விளக்கும் கேட்கும் தமிழக தேர்தல் அதிகாரி
பெரும்பாக்கத்தில் 32,000 ஓட்டு 'மிஸ்ஸிங்' விளக்கும் கேட்கும் தமிழக தேர்தல் அதிகாரி
ADDED : ஏப் 16, 2024 12:21 AM

சென்னை, 'சென்னை, பெரும்பாக்கத்தில் 32,000 பேருக்கு ஓட்டு போட முடியாத சூழல் ஏன் ஏற்பட்டது; வாக்காளர் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்காதது ஏன்' என, செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம், தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் கேட்டுள்ளார்.
பெரும்பாக்கம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 21,000 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. மொத்தம், 160 பிளாக்குகளில், 60,000த்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சமுதாய வளர்ச்சி பிரிவு ஏற்படுத்தி தருகிறது.
இந்த குடியிருப்பு வளாகத்தில் குறைந்தது, 50,000த்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், 18,250 வாக்காளர்களுக்கு மட்டுமே ஓட்டு உள்ளது. இதிலும், 2,000 வாக்காளர்களின் பெயர்களில் குளறுபடி உள்ளது.
இங்கு வசிப்பவர்கள், மறுக்குடியமர்வு செய்யப்பட்டபோது, ஏற்கனவே அவர்கள் வசித்த பகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்த பெயர்கள் நீக்கப்பட்டன.
அதற்கு மாறாக, வாரியம் மற்றும் சமுதாய வளர்ச்சி பிரிவு சேர்ந்து, மக்களை ஒருங்கிணைத்து, தேர்தல் அலுவலகம் வாயிலாக, பெரும்பாக்கத்தில் முகவரி மாற்றம் செய்து, புதிய வாக்காளர் அட்டை வழங்கி இருக்க வேண்டும்.
இதை துறைகள் ஒருங்கிணைந்து செய்யாததால், 32,000த்துக்கும் மேற்பட்டோர் ஓட்டு போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, நம் நாளிதழில் விரிவாக செய்தி
வெளியானது.
இதையடுத்து, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் சமுதாய வளர்ச்சி பிரிவு அலுவலர்களிடம், உயர் அதிகாரிகள் விளக்கம் கேட்டனர்.
இதற்கு, 'வாக்காளர் அடையாள அட்டை வாங்கி கொடுக்கும் பொறுப்பு எங்களுக்கு இல்லை; வருவாய்த்துறை தான் முகாம் நடத்தியது. அவர்கள் தான் முழு பொறுப்பு' என, பதில் கூறி உள்ளனர்.
பதிலில் திருப்தி அடையாத உயர் அதிகாரிகள், 'முகாம் நடத்துவது வருவாய்த்துறை என்றாலும், முகாமில் மக்களை ஒருங்கிணைத்து வரவழைப்பதும், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் குறித்து பிளாக் வாரியாக கணக்கெடுப்பு நடத்தி தீர்வு காண, வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இதை செய்தீர்களா' என கேட்டுள்ளனர்.
தொடர்ந்து, தேர்தல் முடிந்ததும், பெரும்பாக்கத்தில் குடியிருக்கும் அனைவருக்கும் வாக்காளர் அட்டை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், பெரும்பாக்கத்தில் 32,000 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை இல்லாதது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
அடுத்த தேர்தலுக்கு, அவர்கள் ஓட்டளிக்கும் வகையில், வாக்காளர் அடையாள அட்டை தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்டோர் கூறினர்.

