sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சென்னையில் அதிகரித்து வரும் இளம் ரவுடிகளால் பீதி அட்டூழியம்! பணம் பறிப்பு முதல் கொலை வரை பெருகும் குற்றங்கள்

/

சென்னையில் அதிகரித்து வரும் இளம் ரவுடிகளால் பீதி அட்டூழியம்! பணம் பறிப்பு முதல் கொலை வரை பெருகும் குற்றங்கள்

சென்னையில் அதிகரித்து வரும் இளம் ரவுடிகளால் பீதி அட்டூழியம்! பணம் பறிப்பு முதல் கொலை வரை பெருகும் குற்றங்கள்

சென்னையில் அதிகரித்து வரும் இளம் ரவுடிகளால் பீதி அட்டூழியம்! பணம் பறிப்பு முதல் கொலை வரை பெருகும் குற்றங்கள்

1


ADDED : ஏப் 26, 2024 12:03 AM

Google News

ADDED : ஏப் 26, 2024 12:03 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் கூடாரமான தலைநகர் சென்னையில், ரவுடிகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. கொலை, வழிப்பறி, வாகனங்களை நொறுக்கி, அராஜகத்தில் ஈடுபடும் இவர்களால்,பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சென்னையில், 1990களில் வியாசர்பாடி, கொடுங்கையூர், மகாகவி பாரதியார் நகர், புளியந்தோப்பு, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில், ரவுடிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

இப்பகுதிகளுக்கு நிகராக சைதாப்பேட்டை, தி.நகர், அயோத்திக்குப்பம், ஐஸ்ஹவுஸ், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும், ரவுடிகள் அட்டூழியம் செய்து வந்தனர்.

தலைநகரை மிரட்டும் ரவுடிகளின் பட்டியலில் வெள்ளை ரவி, சேரா, ஆசைத்தம்பி, காட்டான் சுப்பிரமணியன், 'கேட்' ராஜேந்திரன், கபிலன், அயோத்திக்குப்பம் வீரமணி, 'பங்க்' குமார் உள்ளிட்டோர் இடம்பெற்று இருந்தனர்.

ஆள் கடத்தல், கூலிக்கு கொலை செய்தல், கட்டப்பஞ்சாயத்து, நடிகையரை ஆழ்கடலுக்கு கடத்திச் சென்று, சித்ரவதை செய்வது என, இவர்களின் ஆட்டம் எல்லை மீறியது. போலீசார் பிடிக்க முயன்ற போது, தாக்குதல் நடத்திய வெள்ளை ரவி, வீரமணி, 'பங்க்' குமார் உள்ளிட்ட ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

'கேட்' ராஜேந்திரன், காட்டான் சுப்பிரமணியன் உள்ளிட்ட ரவுடிகளின் கதையை, அவர்களின் எதிரிகளே முடித்துவிட்டனர். இதனால், ரவுடிகளின் அட்டகாசம் படிப்படியாக குறைந்தது.

தற்போது, மீண்டும் சென்னையில் புற்றீசல் போல ரவுடிகள் அதிகரித்து விட்டனர். 21 முதல் 28 வயதுடைய இளம் ரவுடிகள், போலீசாருக்கு சவாலாக உள்ளனர்.

'சினிமா படங்களில் வருவது போல, கூலிப்படை தலைவனாக வேண்டும்; பெரிய ரவுடியாக உருவெடுக்க வேண்டும்' என்ற நோக்கில், தாக்குதல் நடத்துவதையும், கொலை செய்வதையும் தொழிலாக செய்து வருகின்றனர்.

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தலில், அதிக வருமானம் கிடைப்பதால், ரவுடிகளின் கவனம் அதன் மீது திரும்பியது. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலை ஒட்டி, ரவுடிகள் போலீசாரின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் குற்றங்களில் ஈடுபடக் கூடாது என, உறுதிமொழி பத்திரமும் பெற்றனர்.

இருந்தும் சமீபத்தில், திருமங்கலம் பகுதியில், பா.ஜ.,வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரின் உயிரை குறிவைத்து, துப்பாக்கிகளுடன் பதுங்கி இருந்த, 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பதுடன், சாலைகளில் நிறுத்தப்படும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கி அட்டூழியம் செய்து வருகின்றனர்.

இரு நாட்களுக்கு முன், தி.நகர் அருகே மாம்பலம், ரெட்டி குப்பம் மேற்கு பகுதியில், டாஸ்மாக் ஊழியர் கார்த்திக், 28, என்பவரை கத்தியால் வெட்டி, 15,000 ரூபாய் மற்றும் மொபைல் போனை ரவுடிகள் பறித்தனர்.

நேற்று முன்தினம், ரவுடிகள் மூன்று பேர், 'உபேர்' செயலி வாயிலாக கார் சவாரியில், கொடுங்கையூர் பகுதியில் ஏறி உள்ளனர். அந்த காரை, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரண் சந்த், 23, என்பவர் ஓட்டிச் சென்றார். காரில் ஏறிய பின், அவரது கழுத்தில் கத்தியை வைத்து, சட்டைப் பையில் இருந்த, 300 ரூபாயை பறித்தனர்.

பின், அவரது மொபைல் போனை வாங்கி, 'கூகுள் பே' செயலி வாயிலாக, 1,500 ரூபாய் இருப்பதை அறிந்து, ஏ.டி.எம்., ஒன்றில் இருந்து அந்த பணத்தை எடுத்து சென்றனர்.

சமீபத்தில் புழல், கதிர்வேடு பகுதியில், பைக்கில் பட்டாக்கத்திகளுடன் சென்ற இருவர், சாலையில் கத்திகளை உரசியபடி, பொதுமக்களை அச்சுறுத்தினர். பல்லாவரத்தில் சாலையில் நின்றிருந்த மூவரிடம் ரோந்து போலீசார் விசாரித்த போது, அவர்கள் தகராறு செய்து, ரோந்து வாகனத்தின் கண்ணாடியை நொறுக்கினர்.

இதுபோன்ற சம்பவங்கள் சென்னையில் அதிகரித்து வருவதால், வெளியில் செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, தமிழக அரசு இதை கவனித்து, ரவுடிகளின் ஆட்டத்தை அடக்க, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

175 பேர் சிக்கினர்

சென்னையில் கடந்த 28 நாட்களில், வெவ்வேறு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் திருட்டு தொடர்பான வழக்கில் ஈடுபட்டு வந்த, 175 பேரை கைது செய்து உள்ளனர்.இவர்களிடம் இருந்து, 34 சவரன் நகை, 222 கிலோ வெள்ளி பொருட்கள், 46 மொபைல்போன்கள், 31.49 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டனர். நடப்பாண்டில் திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த, 64 பேரை, குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.



ஜன்னலை திறந்தால் போச்சு

சென்னையில் வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தின் தாக்கம் காரணமாக மக்கள், இரவு நேரத்தில் வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு துாங்குகின்றனர்.இதை திருடர்கள் சிலர் தங்களுக்கு சாதகமாக்கி, கைவரிசை காட்டுகின்றனர். புளியந்தோப்பு, கே.பி.பார்க் குடியிருப்பைச் சேர்ந்த கவுரி,64, மற்றும் அதே பகுதி 'ஏ- பிளாக்'கை சேர்ந்த சக்தி,21, இருவரும், வீட்டின் கதவை திறந்து வைத்து துாங்கியுள்ளனர்.இதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், இருவரின் வீட்டிலும் புகுந்து, 10,000 ரூபாய் மதிப்புள்ள தலா இரண்டு மொபைல்போன்களை திருடிச் சென்றுள்ளார்.



- நமது நிருபர் குழு -






      Dinamalar
      Follow us