/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாவட்டத்தின் 359 ஊராட்சிகளிலும் மகளிர் சபை...துவக்கம்!:பெண்கள் பிரச்னையை விவாதித்து தீர்வு காண நோக்கம்
/
மாவட்டத்தின் 359 ஊராட்சிகளிலும் மகளிர் சபை...துவக்கம்!:பெண்கள் பிரச்னையை விவாதித்து தீர்வு காண நோக்கம்
மாவட்டத்தின் 359 ஊராட்சிகளிலும் மகளிர் சபை...துவக்கம்!:பெண்கள் பிரச்னையை விவாதித்து தீர்வு காண நோக்கம்
மாவட்டத்தின் 359 ஊராட்சிகளிலும் மகளிர் சபை...துவக்கம்!:பெண்கள் பிரச்னையை விவாதித்து தீர்வு காண நோக்கம்
ADDED : மார் 08, 2024 09:04 PM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், மகளிர் பிரச்னைக்கு தீர்வு காண, மகளிர் சபை துவக்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
தமிழகத்தில், பெண்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கவும், சுய சார்ப்பு நிலையை அடையவும், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மகளிர் திட்டத்தின் வழிகாட்டுதல்படி செயல்பட்டு வருகின்றன.
மகளிர் குழுக்களை ஊக்குவிப்பதற்காக சூழல் நிதி, பொருளாதார கடன்கள், நேரடி கடன்கள் வங்கிகளின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. தொழில் முனைவோர் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, பொருளாதார மேம்பாடு அடைந்து வருகின்றன.
இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு வாழ்வாதார இயக்கத்தின் மூலம் பயிற்சி, வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. மகளிர் குழுக்களில், 18 வயதிற்கு மேற்பட்ட ஒரே பகுதியைச் சேர்ந்த, ஒத்த கருத்துடைய மகளிர் இணைந்து, குழுவாக செயல்படுகின்றனர்.
இவர்கள் மாதத்திற்கு ஒருமுறை குழு வாயிலாக பணத்தை சேமித்து வருகின்றனர்.
குழு உறுப்பினர்களுக்கு கடன் கொடுப்பதன் வாயிலாக, குழுவை மேம்படுத்தி வருகின்றனர்.
மேலும், குழு உறுப்பினர்கள் தங்களின் வளர்ச்சிக்காக, குடிசை தொழில், சிறு தொழில், தையல் மிஷின் வாங்குவது தொடர்பாக, மாதாந்திர கூட்டத்தில் விவாதித்து செயல்படுத்தி வருகின்றனர். இவர்களின் செயல்பாட்டை ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு கண்காணித்து வழிகாட்டுகிறது.
இது ஒருபுறம் இருக்க, தற்போது ஒவ்வொரு ஊராட்சியிலும், மகளிர் சபை அமைக்க, மத்திய - மாநில அரசுகளின் வழிகாட்டுதல் படி, தமிழகம் முழுதும் 12,525 ஊராட்சிகளில் மகளிர் கிராம சபை அமைக்கப்படுகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில் மகளிர் சபை துவக்க, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் அறிவுரை வழங்கினார்.
இதை தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்துார், வெள்ளபுத்துார், கேளம்பாக்கம், மண்ணிவாக்கம், படூர் உள்ளிட்ட, 20 முன்மாதிரி கிராம ஊராட்சிகளில், ஊராட்சி தலைவர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, மாவட்ட அளவில், சில தினங்களுக்கு முன், திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், மண்ணிவாக்கம் ஊராட்சியில், மகளிர் கிராம சபை துவக்க விழா, ஊராட்சி தலைவர் கெஜலட்சுமி தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது. மகளிர் உதவி திட்ட அலுவலர் உமாமேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மகளிர் சபையில், 11 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் முதல் பெண்கள் அனைவரும் பங்கேற்றனர்.
இந்த சபையில், பெண்களின் முன்னேற்றத்திற்கான வழிகள், தொழில் ரீதியாக சந்திக்கும் பிரச்னைகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து, பெண்கள் ஒன்று கூடி விவாதிப்பர்.
ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டத்திற்கு, 15 நாட்களுக்கு முன், மகளிர் சபையை கூட்டி, மகளிர் பிரச்னைகள் விவாதித்து, கிராம சபை கூட்டத்தில் தீர்வு காணப்படும்.
மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, மகளிர் சபை துவக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், மகளிருக்கான பிரச்னைகள் குறித்து விவாதித்து, தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்திற்காக, மகளிர் சபை உருவாக்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள்,
செங்கல்பட்டு.

