/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிடப்பில் போடப்பட்ட நிழற்குடை பணிகள்
/
கிடப்பில் போடப்பட்ட நிழற்குடை பணிகள்
ADDED : டிச 15, 2025 05:53 AM

செங்கை - வண்டலுார் தடத்தில் பயணியர் தவிப்பு
வண்டலுார்: வண்டலுார் முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கத்தின் போது, தமிழக நெடுஞ்சாலை துறையால் அகற்றப்பட்ட பேருந்து நிழற்குடைகள், மீண்டும் கட்டித்தரப்படவில்லை. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை அரசு பயன்படுத்தவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
சென்னையின் நுழைவாயிலாகவும், முக்கிய வழித்தடமாகவும், வண்டலுார் முதல் செங்கல்பட்டு வரையிலான, 29 கி.மீ., துார ஜி.எஸ்.டி., சாலை உள்ளது.
இந்த சாலையின் இரு பக்கமும் 40க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. தவிர, நந்திவரம் -- கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் ஆகிய நகராட்சிகளும் உள்ளன. மேலும், கிளாம்பாக்கம் பேருந்து முனையமும் இதே வழித்தடத்தில் உள்ளது.
இப்பகுதிகளிலிருந்து பள்ளி, கல்லுாரி, தொழில், வணிகம் மற்றும் கூலி வேலை என, தினமும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசு பேருந்துகள் மூலமாக, பல்வேறு இடங்களுக்கு பயணிக்கின்றனர்.
இவர்கள், தங்கள் ஊராட்சி பகுதியிலிருந்து ஜி.எஸ்.டி., சாலைக்கு வந்து, அங்கிருந்து அரசு பேருந்துகள் மூலமாக, தாங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு பயணிக்கின்றனர்.
அரசு பேருந்துகள் நின்று செல்ல, வண்டலுார் முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், இரு மார்க்கத்திலும் தலா 23 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.
இதில், 7 பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே, பயணியர் நிழற்குடை உள்ளது.
மீதமுள்ள 16 நிறுத்தங்களில் நிழற்குடை இல்லை. இதனால் வெயில், மழையில் பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
வண்டலுார் முதல் கூடுவாஞ்சேரி வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில் இரணியம்மன் கோவில், வண்டலுார் ரயில் நிலையம், உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம் பள்ளி, டீ கடை, அக் ஷயா நகர், கூடுவாஞ்சேரி என, எட்டு இடங்களில் பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.
இதில், வண்டலுார் ரயில் நிறுத்தம், ஊரப்பாக்கம் டீ கடை நிறுத்தம் என, இரு இடங்களில் மட்டுமே, நிழற்குடைகள் உள்ளன. கூடுவாஞ்சேரியில், ஒரு பக்கம் மட்டும், தென்னங்கீற்றுகளால் தற்காலிக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
கூடுவாஞ்சேரி முதல் மறைமலை நகர் வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில் சீனிவாசபுரம், தைலாபுரம், பொத்தேரி, காட்டாங்கொளத்துார், மறைமலை நகர் என, ஐந்து பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.
இதில், மறைமலை நகரில் மட்டும், ஒரு பக்கம் நிழற்குடை உள்ளது. மற்றொரு பக்கம் தற்காலிக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இதர நான்கு நிறுத்தங்களில், நிழற்குடைகள் இல்லை.
மறைமலை நகர் முதல் செங்கல்பட்டு வரையிலான சாலையில், போர்டு கார் கம்பெனி, கீழ்க்கரணை, மெல்ரோசாபுரம், சிங்கபெருமாள் கோவில், சிறுசேரி, சத்யா நகர், மகேந்திரா சிட்டி, டோல்கேட், புலிப்பாக்கம், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் என, 10 இடங்களில் பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.
இதில் சத்யா நகர், புலிப்பாக்கம், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே நிழற்குடைகள் உள்ளன.
வண்டலுார் முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலையின் இரு பக்கமும், தலா 23 பேருந்து நிறுத்தங்கள் என, மொத்தம் 46 நிறுத்தங்கள் உள்ளன. இதில் 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிழற்குடைகள், ஏழு இடங்களில் மட்டும் உள்ளன.
கடந்த 2018ல், ஜி.எஸ்.டி., சாலை, எட்டு வழித்தடமாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதற்காக, மத்திய அரசின் நெடுஞ்சாலை ஆணையத்திடமிருந்து, தமிழக நெடுஞ்சாலை துறை, 270 கோடி ரூபாயை பெற்று, சாலை விரிவாக்க பணிகளை துவக்கியது.
அப்போது, பல இடங்களில் கட்டப்பட்டிருந்த நிழற்குடைகள் அகற்றப்பட்டன. ஆனால், இதுநாள் வரை புதிய நிழற்குடைகள் அமைக்கப்படவில்லை.
சில இடங்களில், பகுதி சார்ந்த அரசியல் கட்சியினர், 'ஆஸ்பெஸ்டாஸ்' மற்றும் கூரை வேயப்பட்ட நிழற்குடைகளை தற்காலிகமாக அமைத்துள்ளனர்.
இதில், பயணியர் அமரும் வசதி இல்லை. இதனால், பேருந்திற்காக காத்து நிற்கும் பயணியர் வெயில், மழையால் கடும் அவதியை சந்திக்கின்றனர்.
எனவே, தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி, ஜி.எஸ்.டி., சாலையில் நிழற்குடைகள் இல்லாத பேருந்து நிறுத்தங்களை கணக்கெடுத்து, அங்கே தரமான நிழற்குடை அமைத்து, பயணியர் நலம் காக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.

