/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாறுமாறாய் நிற்கும் தனியார் பேருந்துகள் சிங்கபெருமாள் கோவிலில் நெரிசல்
/
தாறுமாறாய் நிற்கும் தனியார் பேருந்துகள் சிங்கபெருமாள் கோவிலில் நெரிசல்
தாறுமாறாய் நிற்கும் தனியார் பேருந்துகள் சிங்கபெருமாள் கோவிலில் நெரிசல்
தாறுமாறாய் நிற்கும் தனியார் பேருந்துகள் சிங்கபெருமாள் கோவிலில் நெரிசல்
ADDED : டிச 17, 2024 12:31 AM

மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், 20,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் நூற்றுக்கணக்கான வணிக கட்டடங்கள், உள்ளன.
மேலும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு தினமும் இங்கு வந்து செல்கின்றனர். மேலும் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட திருத்தேரி, பாரேரி, சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தங்கி மகேந்திரா சிட்டி, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர்.
இங்கு தொழிலாளர்களை பணிக்கு அழைத்து செல்லும் தனியார் தொழிற்சாலை பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் நிறுத்தி தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளும் ஏற்பட்டு வருவதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல காலை ,மதியம், இரவு என வரிசையாக வரும் தனியார் தொழிற்சாலை பேருந்துகள் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுவது இல்லை. அரசு பேருந்து நிறுத்தத்தில் பயணிகளுக்கு இடையூறாக நிற்பதால் பயணியர் அரசு பேருந்துகளை தவறவிடும் நிலை ஏற்படுகிறது.
மேலும் நெடுஞ்சாலை நடுவே, சிக்னல், கடவுப்பாதை போன்ற இடங்களில் நிறுத்தி தொழிலாளர்களை ஏற்றும் போது நெரிசல் ஏற்பட்டு வாக்குவாதங்கள் எழுகின்றன.
குறிப்பாக முகூர்த்தம் மற்றும் விஷேச நாட்களில் ஒரகடம் சந்திப்பு முதல் பாரேரி பிள்ளையார் கோவில் வரை வாகனங்கள் நெரிசலில் அணிவகுத்து அவசர கால வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
மேலும் நெடுஞ்சாலை அதிக அளவில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அதே போல சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் பகுதியில் எதிர் திசையில் தனியார் தொழிற்சாலை பேருந்துகள் போட்டி போட்டு நிறுத்தப்படுவதும் நெரிசலுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
எனவே போக்குவரத்து போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் தனியார் தொழிற்சாலை பேருந்து டிரைவர்களுக்கு உரிய விதி படி வாகனங்களை இயக்க உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

