/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'பயோ மைனிங்' திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு அலட்சியம் கொளத்துார் கிடங்கில் குவிந்துள்ள குப்பை மலை
/
'பயோ மைனிங்' திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு அலட்சியம் கொளத்துார் கிடங்கில் குவிந்துள்ள குப்பை மலை
'பயோ மைனிங்' திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு அலட்சியம் கொளத்துார் கிடங்கில் குவிந்துள்ள குப்பை மலை
'பயோ மைனிங்' திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு அலட்சியம் கொளத்துார் கிடங்கில் குவிந்துள்ள குப்பை மலை
ADDED : அக் 23, 2024 01:27 AM

மறைமலை நகர்:தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தினமும் 250 முதல் 300 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. அவை, அனைத்தும் லாரிகள் வாயிலாக, காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சியில் உள்ள 44 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில், 2019 முதல் கொட்டப்பட்டு வருகிறது.
மேலும், காட்டாங்கொளத்துார் ஒன்றியம் மற்றும் புனித தோமையர் மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் இருந்தும் கொண்டுவரப்படும் குப்பையும் கொட்டப்பட்டு வருகின்றன.
இந்த குப்பை கிடங்கில், கடந்த 5 ஆண்டுகளாக குப்பை கொட்டப்பட்டு வருவதால், தற்போது குப்பை மலை போல குவிந்துள்ளது.
இந்த குப்பை கிடங்கை சுற்றி, மலைகள், 767 ஹெக்டேர் பரப்பளவில் காப்புக்காடுகள், நீர்வழித்தடங்கள் மற்றும் நீர்நிலைகள், நெடுஞ்சாலை உள்ளிட்டவை உள்ளதால், துவக்கத்திலேயே குப்பை கிடங்கு அமைக்க, சுற்றியுள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதையும் மீறி குப்பை அனைத்தும் சுத்திகரிக்கப்பட்டு, தரம் பிரித்து அகற்றப்படும் என, அரசு அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, குப்பை கிடங்கு அமைக்க அனுமதியளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலின் போது, தாம்பரம் மாநகராட்சி பகுதியில் மட்டும், 4,160 டன் குப்பை இங்கு கொண்டு வந்து கொட்டப்பட்டது.
தற்போது வரை குப்பை தரம் பிரிக்கப்படாததால், சுற்றியுள்ள இயற்கை வளங்கள் அழிந்து வருவதாக, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
கொளத்துாரில் உள்ள குப்பை கிடங்கு, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த காப்புக்காடுகளில் வசிக்கும் மான், முயல், மயில், முள்ளம்பன்றி உள்ளிட்ட உயிரினங்களுக்கு, இக்குப்பை கிடங்கால் பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள், பிளாஸ்டிக் கழிவு பொருட்களை உட்கொள்வதால் பாதிக்கப்படுகின்றன.
இந்த குப்பை கிடங்கு, சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில் உள்ளதால், இந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர்.
குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவு நீர், மழைநீர் வழித்தடத்தில் சென்று, கொளத்துார் ஏரியில் நேரடியாக கலக்கிறது.
தாம்பரம்,வேளச்சேரி, பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து குப்பை கொட்டப்படுகிறது. தனியார் தொழிற்சாலை கழிவுகளும் கொட்டப்பட்டு வருகின்றன.
குப்பையை தரம் பிரித்து அரைத்து, பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சிக்கும், மட்கும் குப்பையை இயற்கை உரமாக மாற்றும் 'பயோமைனிங்' திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. எனவே, இந்த திட்டத்தை செயல்படுத்த, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கொளத்துார் குப்பை கிடங்கில், 'பயோ மைனிங்' திட்ட பணிகளுக்குஇ 44 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணி ஆணை வழங்கப்பட்டு, அதற்கான இயந்திரங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. அடுத்த மாதம் இயந்திரங்கள் பொருத்தும் பணி துவங்கி, ஆறு மாதங்களில் முடிவடையும். அதன்பின், குப்பை தரம் பிரிக்கும் பணிகள் நடைபெறும்.
- தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள்
குப்பை ஏற்றி வரும் பெரும்பாலான லாரிகள், தார்ப்பாய் மூடாமல் வருகின்றன. குப்பை காற்றில் பறந்து, நெடுஞ்சாலை முழுதும் குப்பைமயமாக உள்ளது. குப்பை லோடு கொட்டிய பின் வெளியே வரும் லாரிகள் மீதும் உள்ள குப்பை, சாலை நடுவே சிதறப்படுவது தொடர்கதையாக உள்ளது. அதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் வழுக்கி விழுந்து பாதிக்கப்படுகின்றனர்.
- கா.துரை,
வாகன ஓட்டி,
சிங்கபெருமாள் கோவில்.

