/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆப்பூர் துணை சுகாதார நிலையத்தை மேம்படுத்தி தரம் உயர்த்த எதிர்பார்ப்பு
/
ஆப்பூர் துணை சுகாதார நிலையத்தை மேம்படுத்தி தரம் உயர்த்த எதிர்பார்ப்பு
ஆப்பூர் துணை சுகாதார நிலையத்தை மேம்படுத்தி தரம் உயர்த்த எதிர்பார்ப்பு
ஆப்பூர் துணை சுகாதார நிலையத்தை மேம்படுத்தி தரம் உயர்த்த எதிர்பார்ப்பு
ADDED : ஜன 02, 2024 04:21 AM

மறைமலை நகர் : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆப்பூர் ஊராட்சியில், ஆப்பூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட இரண்டு கிராமங்கள் உள்ளன. இங்கு, ௧,௦௦௦த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்த கிராமத்தின் பள்ளிக்கூட தெருவில், ரெட்டிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுப்பாட்டில் உள்ள அரசு துணை சுகாதார நிலையம், கடந்த 2012- - 13ம் நிதி ஆண்டில், காஞ்சிபுரம் எம்.பி., தொகுதி நிதி, 12 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.
இந்த துணை சுகாதார நிலையம், மாதத்தில் சில நாட்கள் மட்டுமே திறக்கப்படுவதால், கர்ப்பிணியர் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டோர், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, 10 கி.மீ., துாரத்தில் உள்ள ரெட்டிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:
இந்த ஊராட்சியில், கடந்த 10 ஆண்டுகளில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் புதிதாக வெளி ஊர்களில் இருந்து வந்து, தங்கி, மறைமலை நகர், ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர்.
இந்த துணை சுகாதார நிலையம், மழை காலங்களில் மருத்துவ முகாம் நடத்த மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மற்ற நேரங்களில் மூடியே உள்ளது.
அரசு செவிலியர் ஒருவர் இங்கு தங்கியுள்ளார். எந்த மருந்துகள் கேட்டாலும், ரெட்டிப்பாளையம் செல்லும்படி கூறுகின்றனர்.
இந்த பகுதியில் செல்லும் சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் ஆறு வழி மாநில நெடுஞ்சாலையில், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, பல வாகன ஓட்டிகள் காயமடைகின்றனர்.
அடிபட்டவர்களை மீட்க சிங்கபெருமாள் கோவில் பகுதியில் இருந்து, 108 ஆம்புலன்ஸ் வரும்போது, அது ரயில்வே கேட் சிக்னலில் சிக்குகிறது. இதனால், சில நேரங்களில் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக நெஞ்சுவலி உள்ளிட்ட அவசர சிகிச்சைகளுக்கு, முதலுதவி கூட கிடைக்காமல், கிராம மக்களுக்கு கடும் சிரமம் ஏற்படுகிறது.
எனவே இந்த துணை சுகாதார நிலையத்தை, ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தி, மருத்துவர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை ஏற்படுத்தி தர வேண்டும்' என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

