/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேதகிரீஸ்வரர் தேர் வலம் வரும் பாதையில் புதைவட மின்தட திட்டம் செயல்படுத்தப்படுமா?
/
வேதகிரீஸ்வரர் தேர் வலம் வரும் பாதையில் புதைவட மின்தட திட்டம் செயல்படுத்தப்படுமா?
வேதகிரீஸ்வரர் தேர் வலம் வரும் பாதையில் புதைவட மின்தட திட்டம் செயல்படுத்தப்படுமா?
வேதகிரீஸ்வரர் தேர் வலம் வரும் பாதையில் புதைவட மின்தட திட்டம் செயல்படுத்தப்படுமா?
ADDED : ஆக 25, 2024 01:38 AM

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தேர் வலம் வரும் பாதைகளில், மின்தடத்தை புதைவடமாக அமைக்காமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தமிழக கோவில்களில், தேரில் சுவாமி உலா செல்வது பிரசித்தம். சுவாமி எழுந்தருளிய திருத்தேரை, பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து, மாடவீதிகளில் உலா சென்று, மீண்டும் நிலைக்கு கொண்டு வருவர்.
துண்டிப்பு
முற்காலத்தில் தேர் உலா செல்வது எளிது. தற்காலத்தில் உருவாகியுள்ள மின்கம்பி தடங்கள், தேர் செல்வதற்கு இடையூறாக உள்ளது.
தேர் வலம் வரும் போது, அப்பாதை பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. தேருக்கு இடையூறாக குறுக்கிடும் மின்கம்பி தடங்கள், தற்காலிகமாக துண்டிக்கப்படுகிறது.
மின்சாரம் துண்டிக்கப்படாத சூழலில், பக்தர்கள் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பலர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2022 ஏப்ரல் மாதம் தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு பகுதியில், அப்பர் மட திருத்தேர் வலம் வரும் போது, சாலையோர மின்கம்பியில் தேர் உரசியதால், மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்தனர்.
இதை தொடர்ந்து, முக்கிய கோவில் பகுதிகளில், தேர் வலம் வரும் வீதிகளில், புதைவட மின்தடம் அமைக்க, மின்வாரியம் முடிவெடுத்தது.
ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில், சித்திரை பெருவிழாவில், பஞ்சமூர்த்தி சுவாமியர், தனித்தனி தேரில் வீதியுலா செல்வர்.
ஆலோசனை
தேர்கள் வீதியுலா செல்லும் சதுரங்கப்பட்டினம் சாலை, கருங்குழி சாலை, பெரிய தெரு, கம்மாளர் வீதி ஆகிய பகுதிகளில், மின்சார புதைவடம் அமைக்க, மின்வாரியம் முடிவெடுத்தும், தற்போது வரை செயல்படுத்தவில்லை.
திருக்கழுக்குன்றம் மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
திருக்கழுக்குன்றத்தில், தேர் வீதியுலா செல்லும் சாலை பகுதிகளில், தரைக்கு கீழ் மின்சார கேபிள் புதைத்து, மின் இணைப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டது.
மூன்று இடங்களில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையின் குறுக்கே, கேபிள் புதைக்க வேண்டியுள்ளது.
சாலையை பெயர்த்து, குழி தோண்டி கேபிள் புதைத்து, மீண்டும் சாலை அமைக்க, நெடுஞ்சாலைத் துறைக்கு பணம் செலுத்த வேண்டும்.
இதன் காரணமாக புதைவடம் அமைக்கவில்லை. இதுகுறித்து, உயரதிகாரிகளிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

