/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
களை கட்டும் வண்ண மீன் வியாபாரம்
/
களை கட்டும் வண்ண மீன் வியாபாரம்
ADDED : ஏப் 29, 2024 04:21 AM

சென்னை : கோடை விடுமுறையை தொடர்ந்து வண்ண மீன் வியாபாரம், கொளத்துாரில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
கொளத்துார் மற்றும் சுற்றியுள்ள ரெட்டேரி, விநாயகபுரம் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட வண்ண மீன் வளர்ப்பு பண்ணைகள் உள்ளன. இங்கு 500க்கும் மேற்பட்ட விதவிதமான வண்ண மீன்கள் விற்பனைக்கு உள்ளன.
கொளத்துாரில் 200க்கும் மேற்பட்ட வண்ணமீன் விற்பனையகங்களும், வண்ண மீன்கள் வளர்க்க தேவைப்படும் தொட்டி, நீர் இறைக்கும் மோட்டார் உள்ளிட்ட அழகு கலைப்பொருட்களும் உள்ளன.
குறைந்தபட்சம் 2,000 ரூபாய் முதல் முழு வண்ண மீன் தொட்டி 'செட்'களும், 10 ரூபாய் முதல் மீன்களும் விற்பனைக்கு உள்ளன.
இங்கு விற்கப்படும் மீன்கள், குறைந்தபட்சம் இரண்டு நாள் முதல் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் கூட உயிர்வாழும். தற்போது கோடை விடுமுறை துவங்கியுள்ளதால், வார இறுதி நாட்களில் விற்பனை களைகட்டி வருகிறது. கடைகள் முன் நீர் நிரப்பிய பாலிதின் பைகளில் அழகு வண்ண மீன்களை வாங்க குழந்தைகளுடன் ஆர்வம் காட்டுகின்றனர்.
இங்கு வண்ண மீன்கள் மட்டுமின்றி நாய், பூனை, பறவை, புறா, சேவல் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளும் விற்கப்படுகின்றன. லவ்பேர்ட்ஸ் ஜோடி 150 ரூபாய் முதலாகவும், வெளிநாட்டு பூனைகள் குறைந்தபட்சம் 8,000 ரூபாய் முதலாகவும் விற்கப்படுகின்றன.

