/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிற்ப தொழிலுக்கு குவாரி ஒதுக்குவதாக தேர்தல்தோறும் தொடரும் வாக்குறுதி
/
சிற்ப தொழிலுக்கு குவாரி ஒதுக்குவதாக தேர்தல்தோறும் தொடரும் வாக்குறுதி
சிற்ப தொழிலுக்கு குவாரி ஒதுக்குவதாக தேர்தல்தோறும் தொடரும் வாக்குறுதி
சிற்ப தொழிலுக்கு குவாரி ஒதுக்குவதாக தேர்தல்தோறும் தொடரும் வாக்குறுதி
ADDED : ஏப் 05, 2024 09:40 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் சிற்பத் தொழிலுக்கு பாறை கற்கள் எடுக்க, நிரந்தர கல் குவாரி ஒதுக்கித் தருவதாக, தேர்தல்தோறும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்து, பின்னர் அலட்சியப்படுத்தி வருவதாக சிற்பக்கூடத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, மாமல்லை சிற்பக் கலைஞர்கள் கூறியதாவது:
மாமல்லபுரம் சுற்றுப்புற பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட சிற்ப பட்டறைகள் உள்ளன. உள்நாடு, வெளிநாடுகளுக்கும், சுவாமி, அலங்கார கற்சிலைகளை செய்து அனுப்புகிறோம். 2,500க்கும் மேற்பட்ட சிற்பத் தொழிலாளர் குடும்பத்தினர், இந்த தொழிலையே நம்பியே உள்ளனர்.
ஆனால், சிலை செய்ய தேவையான பாறை கற்கள் கிடைப்பதே மிக அரிதாக உள்ளது. வாலாஜாபாத் அருகில் உள்ள சங்கராபுரத்தில், சிலை செய்வதற்கான தரமான பாறை உள்ளது.
அதை சிற்பத் தொழிலுக்காக மட்டும் ஒதுக்க, அரசிடம் நீண்ட காலமாக கேட்டு வருகிறோம்; நடவடிக்கை இல்லை.
திருநெல்வேலி, நாமக்கல், ஆந்திரா போன்ற தொலைவான இடங்களிலிருந்து, அதிக விலைக்கு கற்கள் வாங்குகிறோம். இங்கு கொண்டு வரவும் அதிக செலவாகிறது. இதே நிலை தொடர்ந்தால், பாரம்பரிய தொழில் அழியும்.
ஒவ்வொரு தேர்தலிலும், எங்களுக்கென கல் குவாரி ஒதுக்கித் தருவதாக, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்குறுதி அளிக்கின்றனர்.
தேர்தல் முடிந்த பின், எங்கள் கஷ்டத்தை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.
தொழில் மேம்பாட்டிற்கு உதவாத அரசு, சிற்பக் கலைஞர்களுக்கு விருது அளித்து என்ன பிரயோஜனம்;வேதனை தான் மிச்சம். இனியும் அரசியல் கட்சியினரை நம்ப தயாரில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

