/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அதிக வட்டி ஆசை காட்டி மோசடி மாதவரம் தம்பதிக்கு 3 ஆண்டு சிறை
/
அதிக வட்டி ஆசை காட்டி மோசடி மாதவரம் தம்பதிக்கு 3 ஆண்டு சிறை
அதிக வட்டி ஆசை காட்டி மோசடி மாதவரம் தம்பதிக்கு 3 ஆண்டு சிறை
அதிக வட்டி ஆசை காட்டி மோசடி மாதவரம் தம்பதிக்கு 3 ஆண்டு சிறை
ADDED : ஏப் 19, 2024 10:20 PM
சென்னை:மாதவரம் மில்க் காலனி, அன்னை வேளாங்கண்ணி நகரைச் சேர்ந்த தம்பதி குமரேசன், 60, ஜெயசீலி, 56. இருவரும், அதே பகுதியில் 'ஜெ.ஜெ., பண்ட்' என்ற பெயரில், கடந்த 2007 - -2008 காலகட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.
இரண்டு நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதில் முதலீடு செய்யும் நபர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி, அப்பகுதியைச் சேர்ந்த மக்களிடம் இருந்து, லட்சக்கணக்கில் பணம் வசூலித்து உள்ளனர்.
இந்த நிலையில், திட்டம் முதிர்வு அடைந்தும் தான் முதலீடு செய்த தொகையை, நிதி நிறுவன உரிமையாளர்கள் திருப்பி வழங்காமல் ஏமாற்றியதாக, சென்னை மத்திய குற்றப் பிரிவில், முரளி என்பவர், 2009 பிப்., 18ல் புகார் அளித்தார்.
புகாரில், 'அதிக வட்டி தருவதாக கூறியதை நம்பி, 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன்; திட்டம் முதிர்வு ஆகியும் பணத்தை திருப்பி தரவில்லை' என, குறிப்பிட்டிருந்தார்.
புகாரின்படி வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், அதிக வட்டி தருவதாக கூறியதை நம்பி, முதலீடு செய்த 31 நபர்களிடம் இருந்து, 25 லட்சத்து 37,681 ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
பின், பாதிக்கப்பட்ட மற்றொரு நபரான விஜயா என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை பொருளாதார குற்றப் பிரிவுக்கு வழக்கு விசாரணையை மாற்றி உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணை, 'டான்பிட்' எனப்படும் நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
போலீஸ் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.பாபு ஆஜரானார்.
இரு தரப்பு வாதங்களுக்கு வாதங்களுக்கு பின் சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி கே.தனசேகரன் பிறப்பித்த தீர்ப்பு: கல்வி, திருமணம் போன்ற நற்காரியங்களுக்காக கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் நடத்திய நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
ஆனால் உறுதி அளித்தபடி, முதிர்வு தொகையை திருப்பி அளிக்கவில்லை. இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன.
எனவே, இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதமாக மொத்தம் 24.60 லட்சம் விதிக்கப்படுகிறது.
அபராத தொகையில், 21 லட்சத்து 28,751 ரூபாயை, நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டிருக்கும் தகுதியான முதலீடுதாரர்களுக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

