/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கத்தில் தொடரும் பயணியர் புலம்பல்; கூடுதல் கவுன்டர், ஏ.டி.எம்., வசதிகள் இல்லாததால் அதிருப்தி
/
கிளாம்பாக்கத்தில் தொடரும் பயணியர் புலம்பல்; கூடுதல் கவுன்டர், ஏ.டி.எம்., வசதிகள் இல்லாததால் அதிருப்தி
கிளாம்பாக்கத்தில் தொடரும் பயணியர் புலம்பல்; கூடுதல் கவுன்டர், ஏ.டி.எம்., வசதிகள் இல்லாததால் அதிருப்தி
கிளாம்பாக்கத்தில் தொடரும் பயணியர் புலம்பல்; கூடுதல் கவுன்டர், ஏ.டி.எம்., வசதிகள் இல்லாததால் அதிருப்தி
ADDED : மே 19, 2024 07:10 AM

கூடுவாஞ்சேரி : கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில், கூடுதல் ஏ.டி.எம்., மற்றும் டிக்கெட் கவுன்டர் வசதிகள் இல்லாததால், வார விடுமுறை நாளான நேற்று, பயணியர் கடும் அவதிப்பட்டனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். பேருந்து நிலையத்தில் ஏ.டி.எம்., இயந்திரம் இல்லாததால், பணம் எடுக்க முடியாமல் பயணியர் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, இதன் நுழைவாயிலில் ஐந்து ஏ.டி.எம்., இயந்திரங்கள் அமைக்க முடிவானது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்., மட்டுமே, தற்போது செயல்படுகிறது.
மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்., இயந்திரம் வைப்பதற்கு இடம் ஒதுக்கி, அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும், இன்னும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.
இதனால், ஒரேயொரு ஏ.டி.எம்., மையத்தை மட்டும் பயன்படுத்தும் பயணியர், பணம் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை தொடர்கிறது.
இப்பேருந்து முனையம் திறந்தபோது, ஏராளமான குளறுபடிகள் இருந்தன. பயணியரின் தொடர் புகார்களை அடுத்து, ஒவ்வொன்றாக சரிசெய்யப்பட்டு வருகிறது. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே, போதிய ஏ.டி.எம்., மையம் அமைக்காமல் இருப்பது, பயணியரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பயணியர் கூறியதாவது:
திருச்சிக்கு செல்வதற்காக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு குடும்பத்துடன் வந்தேன். இங்கு, போதிய பேருந்து வசதி இல்லை. ஏற்கனவே உள்ள திருச்சி பேருந்துகள், முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது.
விடுமுறை நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், கவுன்டரில் முன்பதிவு செய்து, டிக்கெட் பெறும் வசதி இருந்தால் நன்றாக இருக்கும்.
நேற்று வார விடுமுறை நாட்கள் என்று தெரிந்தும், முன்பதிவு டிக்கெட் கவுன்டர்களில், ஒரேயொரு கவுன்டர் தான் செயல்பட்டது. இதனால், பயணியர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கூடுதல் டிக்கெட் கவுன்டர் அமைக்கவும், முன்பதிவில்லா பேருந்துகளை கூடுதலாக இயக்கவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் நுழைவாயிலில், பயணியரின் வசதிக்காக, பெரிய எல்.இ.டி., திரை நிறுவப்பட்டு வருகிறது. இதில் பயணியர் செல்லும் ஊர், பேருந்து நிற்கும் நடைமேடை, பேருந்துகளில் காலி இருக்கைகள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெறும். ஏ.டி.எம்., மையம் ஒன்று திறந்து நடைமுறையில் உள்ளது. மற்ற ஏ.டி.எம்., இயந்திரங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. விரைவில், பயன்பாட்டுக்கு வரும்.
- சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள்

