/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆம்னி பேருந்து பிடிக்க தினமும் 100 வேன் இயக்கம்
/
ஆம்னி பேருந்து பிடிக்க தினமும் 100 வேன் இயக்கம்
ADDED : மார் 22, 2024 10:17 PM
சென்னை:பயணியர் சிரமத்தை போக்க, சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து போரூர், கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்திற்கு தினமும் 100 வேன்கள் இயக்கப்பட்டு வருவதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் திறந்த பின், சென்னை கோயம்பேடு, எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பயணியரை ஏற்றி செல்லவும், இறக்கிவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேல் முறையீட்டு வழக்கில் கோயம்பேடு, போரூர், சூரப்பட்டில் பயணியரை ஏற்றி, இறக்க நீதிமன்றம் தற்காலிகமாக அனுமதித்துள்ளது.
தற்போது, மாநகரின் பல்வேறு இடங்களில் இருந்து, ஆம்னி பேருந்துகளில் பயணிக்க வசதியாக 100 வேன்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறியதாவது:
கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்குவதால் பயணியர் சிரமப்பட்டனர்.
மேலும், அவர்களின் இருப்பிடத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளில் செல்வதற்கு, நீண்ட துாரம் மாநகர பேருந்துகள் மாறி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, அவர்களுக்காக, அம்பத்துார், பிராட்வே, கோயம்பேடு, எழும்பூர், வடபழனி, அசோக் நகர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட வேன்களை இயக்கி வருகிறோம்.
இதற்காக, பயணியரிடமிருந்து தனியாக கட்டணம் வசூலிப்பதில்லை. கோடை விடுமுறையின் போது ஆம்னி பேருந்துகளில் பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
பயணியரின் தேவைக்கு ஏற்ப, பேருந்துகள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

