/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ரிபாகினாவை வென்ற ஸ்வியாடெக்
/
ரிபாகினாவை வென்ற ஸ்வியாடெக்
ADDED : டிச 26, 2025 11:09 PM

ஷென்ஷென்: சீனாவில் உலக டென்னிஸ் கான்டினென்டல் கோப்பை தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் போட்டியில் போலந்தின் ஸ்வியாடெக், கஜகஸ்தானின் ரிபாகினா மோதினர். இதில் ஸ்வியாடெக் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், 4-6, 6-2, 10-5 என சீனாவின் வாங் ஜினை வீழ்த்தினார்.
இன்று பென்சிக்-ரிபாகினா, ஸ்வியாடெக்-வாங் ஜின் மோத உள்ளனர்.
சிறப்பாக தயாராவோம்
புதுடில்லி: இந்திய ஹாக்கி அணி, 2026ல் ஹாக்கி புரோ லீக், உலக கோப்பை ஹாக்கி, ஆசிய விளையாட்டு என பல்வேறு தொடர்களில் பங்கேற்க உள்ளது. முன்னதாக 2026, ஜன. 3ல் ஹாக்கி இந்தியா லீக் தொடர் நடக்க உள்ளது. இதுகுறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கூறுகையில்,'' ஹாக்கி லீக் தொடரில் சரியான நேரத்தில் நடத்தப்படுகிறது. சர்வதேச அரங்கில் சிறப்பாக செயல்பட, இத்தொடரை இந்திய அணி வீரர்கள் பயிற்சிக் களமாக பயன்படுத்திக் கொள்வர்,'' என்றார்.
கால்பந்து: தெலுங்கானா கலக்கல்
கோல்கட்டா: இந்தியாவில் சந்தோஷ் டிராபி கால்பந்து தொடர் 79 வது சீசன் நடக்கிறது. மொத்தம் 38 அணிகள் 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் தெலுங்கானா அணி 4-0 என்ற கோல் கணக்கில் மத்திய பிரதேச அணியை வென்றது. தெலுங்கானா அணிக்கு சைப் ஹுசைன் அன்சாரி (45+2, 65, 68வது நிமிடம்) 'ஹாட்ரிக்' கோல் அடித்து அசத்தினார். சுனில் 7வது நிமிடம் ஒரு கோல் அடித்தார். மற்றொரு போட்டியில் உத்தரகாண்ட் அணி 2-0 என உ.பி., அணியை வீழ்த்தியது.
* இந்தியாவில் பெண்களுக்கான கால்பந்து லீக் (ஐ.டபிள்யு.எல்.,) தொடர் நடக்கிறது. 8 அணிகள் மோதுகின்றன. இன்று கோல்கட்டாவில் நடக்கும் லீக் போட்டியில் கோகுலம் கேரளா-சேது, நீடா-கிக்ஸ்டார்ட் அணிகள் மோதுகின்றன.
* இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர் பல்வேறு குழப்பம் காரணமாக, 2025ல் நடக்கவில்லை. இத்தொடர் குறித்து உறுதியற்ற சூழல் நிலவுகிறது. இதனால் உலகின் முன்னணி சிட்டி கிளப் குரூப் நிர்வாகம், 'மும்பை சிட்டி' அணியில் உள்ள தனது பங்குகளை, விற்றுவிட்டதாக அறிவித்துள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி, அமெரிக்காவின் நியூயார்க் சிட்டி என உலகின் பல்வேறு நாடுகளில் கால்பந்து அணியை நடத்தும் 'சிட்டி' நிர்வாகம், இந்தியாவில் இருந்து வெளியேறியது, பெரும் பின்னடைவு ஆனது.
* நெதர்லாந்தில் குரோனிங்கென் செஸ் தொடர் நடக்கிறது. நான்கு சுற்று முடிவில் இந்தியாவின் விக்னேஷ், 3.5 புள்ளியுடன் (3 வெற்றி, 1 'டிரா') முதலிடத்தில் உள்ளார்.
* துருக்கியில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், ரஷ்யாவின் கொலுபேவ் ஜோடி, 5-7, 3-6 என சுவீடனின் டிராகோஸ், சீனாவின் யுகுன் வாங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
* பிரிமியர் கிரிக்கெட் ஏலத்தில் வெங்கடேஷ் ஐயரை, ரூ. 7 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியது. இது பற்றி இந்திய 'சுழல்' ஜாம்பவான் கும்ளே கூறுகையில்,''கோப்பை வென்ற அணியில் குழப்பம் ஏற்படுத்தக் கூடாது. துவக்க கட்டத்தில் விளையாடும் 'லெவனில்' வெங்கடேஷ் ஐயர் இடம் பெற வாய்ப்பு குறைவு,'' என்றார்.
* ஜூனியர் தேசிய கோ-கோ சாம்பியன்ஷிப், 44 வது சீசன் பெங்களூருவில் டிச. 31 முதல் 2026 ஜன. 4 வரை நடக்க உள்ளது.

