/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
'மின்னலாய்' மெலிஸ்சா, செவில்லே * 100 மீ., ஓட்டத்தில் சாம்பியன்
/
'மின்னலாய்' மெலிஸ்சா, செவில்லே * 100 மீ., ஓட்டத்தில் சாம்பியன்
'மின்னலாய்' மெலிஸ்சா, செவில்லே * 100 மீ., ஓட்டத்தில் சாம்பியன்
'மின்னலாய்' மெலிஸ்சா, செவில்லே * 100 மீ., ஓட்டத்தில் சாம்பியன்
ADDED : செப் 14, 2025 11:12 PM

டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் 100 மீ., ஓட்டத்தில் அமெரிக்காவின் மெலிஸ்சா, ஜமைக்காவின் செவில்லே தங்கம் வென்றனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், உலக தடகள சாம்பியன்ஷிப் 20 வது சீசன் நடக்கிறது. உலகின் 198 நாடுகளில் இருந்து 2202 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 49 போட்டிகளில் 149 பதக்கம் வழங்கப்பட உள்ளன. இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் களமிறங்குகின்றனர்.
ஆண்களுக்கான 100 மீ., ஓட்ட பைனல் நடந்தது. ஜமைக்காவின் ஆப்ளிக்யு செவில்லே, 9.77 வினாடி நேரத்தில் வந்து தங்கம் கைப்பற்றினார். மற்றொரு ஜமைக்க வீரர் கிஷேன் தாம்ப்சன் (9.82 வினாடி) வெள்ளி வென்றார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் நோவா லைல்ஸ், 9.89 வினாடி நேரத்தில் வந்து வெண்கலம் கைப்பற்றினார்.
மெலிஸ்சா அபாரம்
பெண்களுக்கான 100 மீ., ஓட்ட பைனல் நடந்தது. அமெரிக்காவின் மெலிஸ்சா ஜெபர்சன் உட்டன், 10.61 வினாடி நேரத்தில் வந்து தங்கம் வசப்படுத்தினார். ஜமைக்காவின் டினா கிளேடன் (10.76 வினாடி), செயின்ட் லுாசியாவின் ஜூலியன் ஆல்பிரட் (10.84 வினாடி) அடுத்த இரு இடம் பெற்றனர்.
சர்வேஷ் சாதனை
ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் தகுதிச்சுற்று நடந்தது. இதில் 2.25 மீ., உயரம் தாண்டிய சர்வேஷ் அனில் குஷாரே, உலக சாம்பியன்ஷிப், உயரம் தாண்டுதலில் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என சாதனை படைத்தார்.
மூன்றாவது முறை
கடந்த 2023 உலக சாம்பியன்ஷிப் (2.23 மீ.,), 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் (2.15) ஏமாற்றினார் சர்வேஷ். தற்போது மூன்றாவது முயற்சியாக, உலக சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறியுள்ளார்.
ஆண்களுக்கான 10,000 மீ., பைனல் நடந்தது. இந்திய வீரர் குல்வீர் சிங், 29 நிமிடம், 13.33 வினாடி நேரத்தில் வந்து, 16வது இடம் பிடித்து ஏமாற்றினார்.