/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
உலக தடகளம்: இந்தியா ஏமாற்றம்
/
உலக தடகளம்: இந்தியா ஏமாற்றம்
ADDED : செப் 20, 2025 11:11 PM

டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா பதக்கம் வெல்லாமல் வெறுங்கையுடன் திரும்புகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், உலக தடகள சாம்பியன்ஷிப் 20 வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர், 21 போட்டிகளில் பங்கேற்றனர்.
கடந்த இரு சீசனில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, தங்கம் வென்றிருந்தார். இம்முறை 84.03 மீ., துாரம் மட்டும் எறிந்து, 8வது இடம் பிடித்து அதிர்ச்சி தந்தார். சச்சின் யாதவ், 86.27 மீ., துாரம் ஈட்டி எறிந்தார். 40 செ.மீ., வித்தியாசத்தில் வெண்கல பதக்கத்தை நழுவவிட்டார்.
சர்வேஷ் ஆறுதல்
உயரம் தாண்டுதலில் பைனலுக்கு முன்னேறிய சர்வேஷ் குஷாரே (2.28 மீ.,) 6வது இடம் பெற்று ஆறுதல் தந்தார். பெண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் பூஜா, 2 நிமிடம், 01.03 வினாடி நேரத்தில் வந்து 32 வது இடம் பெற்றார்.
தமிழகத்தின் 'டிரிபிள் ஜம்ப்' வீரர் பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபூபக்கர், தகுதிச்சுற்றுடன் வெளியேறினர். ஈட்டி எறிதலில் அன்னு ராணி (55.18 மீ., துாரம்) 29வது இடம் பெற்றார். 200 மீ., ஓட்டத்தில் அனிமேஷ் குஜுர், 32வது இடம் பிடித்தார்.
2036ல் ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா முயற்சிக்கிறது. ஆனால் உலக தடகளம் போன்ற முன்னணி தொடரில் ஒரு பதக்கம் வெல்ல முடியாத நிலையில் உள்ளது சோகம் தான்.
செர்வின் '31'
நேற்று நடந்த 20 கி.மீ., நடை பந்தயத்தில் இந்திய வீரர் செர்வின் செபாஸ்டியன் (ஒரு மணி நேரம், 23.03 நிமிடம்) 31வது இடம் பிடித்து ஏமாற்றினார்.
மூன்று மட்டும்
உலக தடகள சாம்பியன்ஷிப், 1983 முதல் நடக்கிறது. இதுவரை, ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா 2 (2023ல் தங்கம், 2022ல் வெள்ளி), நீளம் தாண்டுதலில் அஞ்சு பாபி ஜார்ஜ் (2023ல் வெண்கலம்) என, இந்தியா 3 பதக்கம் தான் வென்றுள்ளது.