/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
உலக தடகளத்தில் தங்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா?
/
உலக தடகளத்தில் தங்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா?
ADDED : செப் 13, 2025 07:24 AM

டோக்கியோ; உலக தடகள சாம்பியன்ஷிப் இன்று(செப்.,13) டோக்கியோவில் துவங்குகிறது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா மீண்டும் தங்கம் வெல்ல காத்திருக்கிறார்.
உலக தடகள அமைப்பு சார்பில் 1983 முதல், இரு ஆண்டுக்கு ஒருமுறை உலக தடகள சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. இதன் 20வது சீசன் இன்று ஜப்பானின், டோக்கியோ தேசிய மைதானத்தில் துவங்குகிறது.
உலகின் 198 நாடுகளில் இருந்து 2202 வீரர், வீராங்கனைகள் காத்திருக்கின்றனர். 49 போட்டிகளில் 149 பதக்கம் வழங்கப்பட உள்ளன. இந்தியா சார்பில் இம்முறை 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் கள மிறங்குகின்றனர்.
நீரஜ் நம்பிக்கை இதில் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இரு பதக்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ரா மீது மட்டும் தான் நம்பிக்கை காணப்படுகிறது. சுதந்திரத்திற்குப் பின் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை, கடந்த 2021ல் டோக்கியோ மண்ணில் வென்று தந்தார். மீண்டும் அதே மைதானத்தில் சாதிக்கலாம்.
கடந்த மாதம் 90 மீ.,க்கும் மேல் எறிந்த ஜாகுப் வாடில்ச் (செக் குடியரசு), லுாயிஸ் டா சில்வா (பிரேசில்), ஆண்டர்சன் பீட்டர்ஸ், ஜூலியஸ் எகோ (கென்யா) உள்ளிட்டோர் சவால் கொடுக்கலாம். இந்தியாவின் சச்சின் யாதவ், யாஷ்விர் சிங், ரோகித் யாதவும் பைனலுக்கு (செப். 18) முன்னேற வாய்ப்பு உண்டு.
வெல்வாரா அனிமேஷ் உலக தடகளம் 200 மீ., ஓட்டத்தில் பங் கேற்கும் முதல் இந்தியர் அனிமேஷ் குஜுர். தேசிய சாதனையாளரான இவர், பைனலுக்கு முன்னேற முயற்சிக்கலாம். ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி (2017, 2019, 2022, 2023, 2025) 5வது முறையாக பங்கேற்கிறார். இரு முறை (2019, 2022) பைனலுக்கு முன்னேறினார்.
பாருல் சவுத்ரி (பெண்கள் 3000 மீ., ஸ்டீபிள் சேஸ்), காயத்தில் இருந்து மீண்ட முரளி ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), குல்வீர் சிங் (5000 மீ.,), தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் ('டிரிபிள் ஜம்ப்') உள்ளிட்டோர், பைனலுக்கு முன்னேறி நம்பிக்கை தர உள்ளனர்.