ADDED : செப் 09, 2025 11:31 PM

பறக்கும் 'மம்மி ராக்கெட்'
கிங்ஸ்டன்: 100மீ., ஓட்டத்தில் 2 முறை ஒலிம்பிக் தங்கம் வென்றவர் ஜமைக்காவின் ஷெல்லி-ஆன்-பிரேசர்-பிரைஸ். வித்தியாசமான 'ஹேர்-ஸ்டைலில்' அசத்துவார். தாயான பின், 38 வயதிலும் களத்தில் பறக்கும் இவரை 'மம்மி ராக்கெட்' என செல்லமாக அழைக்கின்றனர். இவர் கூறுகையில், ''2017ல் மகன் ஜியான் பிறந்த போது, எனது தடகள வாழ்க்கை முடிந்து விட்டதாக கூறினர். ஆனால் 2019ல் தோகா, உலக தடகள சாம்பியன்ஷிப் 100 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்று காட்டினேன். பெண்களுக்கு 35 வயதானால் திறமை குறைந்து விடுவதாக நினைக்கின்றனர். என்னால் இப்போதும் அதிவேகமாக ஓட முடியும். சமீபத்தில் எனது மகன் படிக்கும் பள்ளியில் நடந்த பெற்றோருக்கான ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்தேன். இந்த ஆண்டு டோக்கியோவில் நடக்க உள்ள உலக தடகளத்தில் பங்கேற்க உள்ளேன்,'' என்றார்.
கூடி வாழ கூடைப்பந்துஹாங்காங்: சமாதான துாதராக அவதாரம் எடுக்கிறார் அமெரிக்க என்.பி.ஏ., கூடைப்பந்து ஜாம்பவான் லெப்ரான் ஜேம்ஸ். சமீபத்தில் சீனாவின் 'பீப்பிள்ஸ் டெய்லி' நாளிதழில் இவர் எழுதிய கட்டுரையில்,'கூடைப்பந்து வெறும் விளையாட்டு அல்ல; இரு நாடுகளை இணைக்கும் பாலம்,' என குறிப்பிட்டுள்ளார். 2019ல் சீனாவுக்கு எதிரான ஹாங்காங் போராட்டத்திற்கு அமெரிக்க கூடைப்பந்து நிர்வாகி டேரில் மோரே ஆதரவு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சீனா, கூடைப்பந்து லீக் போட்டிக்கு தடை விதித்தது. பதிலுக்கு கூடுதல் வரிவிதித்து சீனாவை சீண்டுகிறது அமெரிக்கா. இந்தச் சூழலில் சீனாவில் மீண்டும் கூடைப்பந்து லீக் போட்டியை நடத்தி, இரு நாடுகள் இடையே நல்லுறுவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் லெப்ரான் ஜேம்ஸ்.
கனவே கலையாதே
லண்டன்: பிரிட்டனின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜேக் டிரேப்பர். உலக ரேங்கிங் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார். சமீபத்திய யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் இலக்குடன் களமிறங்கினார். ஆனால், இரண்டாவது சுற்றில் இடது கையில் காயம் ஏற்பட, பாதியில் வெளியேறினார். இந்த சீசன் முழுவதும் விளையாட முடியாத நிலையில் உள்ளார். இவர் கூறுகையில்,''சிறப்பாக விளையாடி கொண்டிருந்த சமயத்தில் காயம் ஏற்பட்டது ஏமாற்றம் அளித்தது. வலிமையாக மீண்டு வருவேன். எனது கனவுகளை எட்டுவேன்,''என்றார்.