ADDED : செப் 22, 2025 10:40 PM

ஜெய்ப்பூர்: புரோ கபடி லீக் போட்டியில் அசத்திய பெங்களூரு அணி, குஜராத்தை வென்றது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. இதில் தமிழ் தலைவாஸ், பெங்கால் உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், 'ரைவல்ரி வீக்' என போட்டிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.
இதன் லீக் போட்டியில் குஜராத், பெங்களூரு அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் பெங்களூரு அணி 17-13 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் குஜராத் 11, பெங்களூரு 10 புள்ளி பெற்றன. ஆட்டநேர முடிவில் பெங்களூரு அணி 28-24 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணிக்கு ஆகாஷ் ஷிண்டே (7 புள்ளி), கேப்டன் யோகேஷ் (6) கைகொடுத்தனர். குஜராத் அணி சார்பில் விஸ்வந்த், லக்கி சர்மா தலா 5 புள்ளி பெற்றனர்.
இதுவரை விளையாடிய 9 போட்டியில், 5 வெற்றி, 4 தோல்வியை பெற்ற பெங்களூரு அணி, 10 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது. ஆறாவது தோல்வியை பதிவு செய்த குஜராத் அணி (2 புள்ளி) 12வது இடத்தில் நீடிக்கிறது.
மற்றொரு லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், உ.பி., அணிகள் மோதின. இதில் தமிழ் தலைவாஸ் 22-39 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.