ADDED : ஜன 03, 2026 10:46 PM

சென்னை:ஹாக்கி இந்தியா லீக் தொடரை தமிழக அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் 4-2 என, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.
சென்னை, ராஞ்சி, புவனேஸ்வரில், ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 7வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.
சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் தமிழகம், ஐதராபாத் அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி 3-3 என 'டிரா' ஆனது.
தமிழகம் சார்பில் உத்தம் சிங் (4வது நிமிடம்), தாமஸ் சோர்ஸ்பி (9வது), செல்வம் கார்த்தி (32வது) தலா ஒரு கோல் அடித்தனர்.
ஐதராபாத் அணிக்கு அமன்தீப் லக்ரா (12, 18வது), ஆர்தர் டி ஸ்லுாவர் (37வது) கைகொடுத்தனர். பின், 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் அசத்திய தமிழக அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
டில்லி பெண்கள் அசத்தல்
ராஞ்சி: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 2வது சீசன் நடக்கிறது. மொத்தம் 4 அணிகள், 'டபுள் ரவுண்டு ராபின்' முறையில் லீக் சுற்றில் விளையாடுகின்றன.
இதன் லீக் போட்டியில் டில்லி, சூர்மா கிளப் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய டில்லி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. டில்லி அணி சார்பில் லோலா ரியேரா (13வது நிமிடம்), ஜோதி சிங் (18வது), சுனேலிதா (58வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். சூர்மா கிளப் அணிக்கு பென்னி (12வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.
இதுவரை விளையாடிய 4 போட்டியில், 3 வெற்றி, ஒரு தோல்வி என 10 புள்ளிகளுடன் டில்லி அணி முதலிடத்தில் உள்ளது. சூர்மா கிளப் அணி 4 போட்டியிலும் தோல்வியடைந்தது.

