ADDED : ஏப் 05, 2024 11:20 PM

ஆமதாபாத்: ஐ.பி.எல்., வீரர்கள் ஏலத்தில் தவறுதலாக வாங்கப்பட்ட சஷாங்க் சிங், பஞ்சாப் அணியின் 'ஹீரோ' ஆனார்.
இந்தியாவில் 17வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. இதற்கான வீரர்கள் 'மினி' ஏலம் கடந்த டிசம்பரில் நடந்தது. இதில் சஷாங்க் சிங் என்ற பெயரில் 19, 32 வயது என இரு வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். 19 வயது சஷாங்க் சிங்கை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்த பஞ்சாப் அணி, தவறுதலாக 32 வயது சஷாங்க் சிங்கை ரூ. 20 லட்சத்திற்கு வாங்கியது. வீரரை ஒப்பந்தம் செய்த பின் மாற்றிக் கொள்ள முடியாது என்பதால் பஞ்சாப் அணி இவர் திறமை மீது நம்பிக்கை வைத்து ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில் ஆமதாபாத்தில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப் அணி (200/7, 19.5 ஓவர்) 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை (199/4, 20 ஓவர்) வென்றது. பேட்டிங்கில் அசத்திய சஷாங்க் சிங் 29 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரி உட்பட 61 ரன் எடுத்து வெற்றிக்கு உதவினார். ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இவரை பஞ்சாப் அணியின் சக உரிமையாளர் நடிகை பிரித்தி ஜிந்தா பாராட்டியுள்ளார்.
சஷாங்க் சிங் கூறுகையில், ''பேட் செய்ய களமிறங்கிய போது என்னை சிறந்த வீரராக கருதினேன். உரிமையாளர்கள், பயிற்சியாளர் குழுவினர் அளித்த ஆதரவு தன்னம்பிக்கையை அதிகரித்தது,'' என்றார்.

