/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
டில்லி அணி 'திரில்' வெற்றி * 77 ரன் விளாசினார் கோலி
/
டில்லி அணி 'திரில்' வெற்றி * 77 ரன் விளாசினார் கோலி
டில்லி அணி 'திரில்' வெற்றி * 77 ரன் விளாசினார் கோலி
டில்லி அணி 'திரில்' வெற்றி * 77 ரன் விளாசினார் கோலி
ADDED : டிச 26, 2025 11:11 PM

பெங்களூரு: விஜய் ஹசாரே லீக் போட்டியில் டில்லி அணி 7 ரன்னில் 'திரில்' வெற்றி பெற்றது. 77 ரன் விளாசிய கோலி ஆட்டநாயகன் ஆனார்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், விஜய் ஹசாரே டிராபி உள்ளூர் ஒருநாள் தொடர் நடக்கிறது. மொத்தம் 38 அணிகள் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள், லீக் முறையில் நடக்கின்றன. நேற்று இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்தன. பெங்களூருவில் நடந்த போட்டியில் கோலி இடம் பெற்ற டில்லி அணி, குஜராத்தை சந்தித்தது. 'டாஸ்' வென்ற குஜராத், பீல்டிங் செய்தது.
கோலி அரைசதம்
முதலில் களமிறங்கிய டில்லி அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா (1), ஆர்பித் ராணா (10) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. நிதிஷ் ராணா (12) ஏமாற்றினார். பின் 'சீனியர்' வீரர் கோலி, கேப்டன் ரிஷாப் பன்ட் இணைந்தனர். பவுண்டரிகளாக (13) விளாசிய கோலி, 61 பந்தில் 77 ரன் எடுத்த போது, விஷால் பந்தில் 'ஸ்டம்டு' ஆனார். ரிஷாப் 70 ரன்னில், விஷால் பந்தில் போல்டானார். டில்லி அணி 50 ஓவரில் 254/9 ரன் மட்டும் எடுத்தது.
குஜராத் அணி ஒரு கட்டத்தில் 41.3 ஓவரில் 213/5 விக்கெட் என வலுவான நிலையில் இருந்தது. 51 பந்தில் 41 ரன் தேவைப்பட்டன. இந்நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த குஜராத், 47.4 ஓவரில் 247 ரன்னில் ஆல் அவுட்டாகி, தோல்வியடைந்தது.
ரோகித் 'டக்'
ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் மும்பை, உத்தரகாண்ட் மோதின. மும்பை அணி துவக்க வீரர் ரோகித் சர்மா ஒரே பந்தில் 'டக்' அவுட்டானார். முஷீர் கான் (55), சர்பராஸ் கான் (55) சகோதரர்கள் கைகொடுக்க, மும்பை 331/7 ரன் குவித்தது. உத்தரகாண்ட் அணி (280/9), 51 ரன்னில் தோற்றது.
* மற்றொரு போட்டியில் ஆர்யன் (134), ரிங்கு சிங் (106 ரன், 60 பந்து) உதவ, உ.பி., அணி (367/4), 227 ரன்னில் சண்டிகரை (140/10) சாய்த்தது.
தமிழகம் ஏமாற்றம்
ஆமதாபாத்தில் நடந்த போட்டியில் தமிழகம், மத்திய பிரதேச அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய தமிழக அணிக்கு சாய் சுதர்சன் (51), கேப்டன் ஜெகதீசன் (55) ஜோடி நல்ல துவக்கம் (115/1) கொடுத்தது. முகமது அலி தன் பங்கிற்கு 57 ரன் எடுத்தார். தமிழக அணி 49.3 ஓவரில் 280 ரன்னில் ஆல் அவுட்டானது.
மத்திய பிரதேச அணிக்கு யாஷ் துபே (92), ஹிமான்சு (90) ஜோடி சிறப்பான ரன் குவிப்பை வெளிப்படுத்தியது. 49.2 ஓவரில் 283/8 ரன் எடுத்து, 2 விக்கெட்டில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் தமிழகத்திடம் தோற்ற புதுச்சேரி (150/10), நேற்று திரிபுராவிடம் (151/3) வீழ்ந்தது.
* ஆமதாபாத்தில் நடந்த மற்றொரு போட்டியில் கருண் நாயர் (130), தொடர்ந்து இரண்டாவது சதம் அடித்த தேவ்தத் படிக்கல் (124) ஜோடி கைகொடுக்க, கர்நாடக அணி (285/2), கேரளாவை (284/7) 8 விக்கெட்டில் வென்றது.
தொடர்ந்து ஐந்து சதம்
'லிஸ்ட் ஏ' அரங்கில் தொடர்ந்து ஐந்து சதம் அடித்து, உலக சாதனை படைத்த ஜெகதீசன் (தமிழகம், 2022-23, விஜய் ஹசாரே டிராபி) சாதனையை விதர்பா வீரர் துருவ் ஷோரே சமன் செய்தார். கடந்த விஜய் ஹசாரே தொடரில் (2024-2025) காலிறுதி (118), அரையிறுதி (114), பைனலில் (110) சதம் அடித்த இவர், இம்முறை முதல் இரு போட்டியில் 136, 109 ரன் என, தொடர்ந்து 5 சதம் அடித்துள்ளார்.
* முன்னதாக இந்தியாவின் கருண் நாயர், தேவ்தத் படிக்கல், பீட்டர்சன் (தெ.ஆப்.,), சங்ககரா (இலங்கை) தொடர்ந்து 4 சதம் அடித்து இருந்தனர்.

