/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஷ்ரேயஸ் ஐயர் தவிப்பு * உடல் எடை குறைந்தது
/
ஷ்ரேயஸ் ஐயர் தவிப்பு * உடல் எடை குறைந்தது
ADDED : டிச 30, 2025 10:48 PM

பெங்களூரு: ஷ்ரேயஸ் ஐயர் உடல் எடை இழப்பு காரணமாக, நியூசிலாந்து தொடரில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயஸ் ஐயர் 31. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன் (243) எடுத்த இந்திய வீரர் ஆனார். சிட்னியில் நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் (அக். 25) இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதில் 'கேட்ச்' பிடித்த போது இந்திய துணை கேப்டன் ஷ்ரேயஸ் ஐயருக்கு இடது விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டு, மண்ணீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டது.
தற்போது சிகிச்சைக்குப் பின் மீண்டு வரும் இவர், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் தேவையான பயிற்சிகளில் ஈடுபட்டார். விஜய் ஹசாரே டிராபி தொடரின் 'நாக் அவுட்' (2026, ஜன. 3, 6) போட்டிகளில் பங்கேற்க உள்ளார். பின், ஜன. 11ல் சொந்த மண்ணில் துவங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்குவார் என செய்தி வெளியாகின.
ஆனால், கடந்த இரு மாதங்களில் ஷ்ரேயஸ் ஐயரின், உடல் எடை 6 கிலோ குறைந்துள்ளது. இதனால் மீண்டும் களமிறங்கும் வாய்ப்பு தள்ளிப் போகிறது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''வலைப்பயிற்சியில் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங் செய்வதில் எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால், அவரது எடை 6 கிலோ குறைந்துள்ளது. தசை அளவும் குறைந்துள்ளது. இது, உடல் வலிமையை பாதித்துள்ளது. ஷ்ரேயஸ் ஐயர் விஷயத்தில், மருத்துவக்குழு 'ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை. இப்போதைக்கு, அவர் முழுமையாக குணமடைய வேண்டும். நியூசிலாந்து தொடருக்கான அணித் தேர்வு நடக்கும் முன், ஷ்ரேயஸ் ஐயர் நிலை குறித்து, தகவல் தெரிவிக்கப்படும்,'' என்றார்.

