/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அபிஷேக் சர்மா புதிய சாதனை * 'டி-20' அரங்கில் ரன் மழை
/
அபிஷேக் சர்மா புதிய சாதனை * 'டி-20' அரங்கில் ரன் மழை
அபிஷேக் சர்மா புதிய சாதனை * 'டி-20' அரங்கில் ரன் மழை
அபிஷேக் சர்மா புதிய சாதனை * 'டி-20' அரங்கில் ரன் மழை
ADDED : டிச 31, 2025 11:01 PM

புதுடில்லி: 'டி-20' அரங்கில் ஒரு ஆண்டில் அதிக 'ஸ்டிரைக் ரேட்' கொண்ட வீரர் என, இந்தியாவின் அபிஷேக் சர்மா புதிய சாதனை படைத்தார்.
இந்திய 'டி-20' அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா 25. ரோகித் சர்மா ஓய்வுக்குப் பின், 'டி-20' அரங்கில் சிறப்பான ரன் குவிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சர்வதேச பேட்டர் தரவரிசையில் 908 புள்ளியுடன் உலகின் 'நம்பர்-1' வீரராக திகழ்கிறார்.
இந்தியா, பஞ்சாப், ஐதராபாத் (பிரிமியர் தொடர்) அணிகளுக்காக ரன் மழை பொழிகிறார். 2025ம் ஆண்டில் இவர் மொத்தம் 1602 ரன் எடுத்துள்ளார். தவிர, கடந்த ஆண்டு விளையாடிய அனைத்து போட்டியிலும் இவரது பேட்டிங் 'ஸ்டிரைக் ரேட்' 202.01 ஆக உள்ளது.
முதல் வீரர்
இதையடுத்து, உள்ளூர், சர்வதேச 'டி-20'ல் ஒரு ஆண்டில் குறைந்தது 1000 ரன் எடுத்த வீரர்களில், 200க்கும் மேல் பேட்டிங் 'ஸ்டிரைக் ரேட்' வைத்துள்ள முதல் வீரர் என சாதனை படைத்தார் அபிஷேக். இதற்கு முன் 198.07 ஆக இருந்தது தான் அதிகம். இதை, 2024ல் அபிஷேக் சர்மா எட்டி இருந்தார்.
சூர்யாவை முந்தினார்
சர்வதேச 'டி-20'ல் இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா, 859 ரன் எடுத்துள்ளார். இதன் 'ஸ்டிரைக் ரேட்' 193.46 ஆக உள்ளது. இதையடுத்து 2025ல் சர்வதேச 'டி-20' ல் குறைந்தது 500 ரன் எடுத்த வீரர்களில், அதிக 'ஸ்டிரைக் ரேட்' கொண்ட வீரர் வரிசையில் அபிஷேக் முதலிடம் பிடித்தார். கேப்டன் சூர்யகுமாரை (1164 ரன், 187.43) பின் தள்ளினார்.
வைபவ் அபாரம்
'டி-20'ல் 1000 ரன்னுக்கும் குறைவாக எடுத்து அதிக 'ஸ்டிரைக் ரேட்' பெற்ற வீரர்களில் இந்தியாவின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 14, முதலிடத்தில் உள்ளார். இவர், 2025ல் மொத்தம் 688 ரன் ('டி-20') எடுத்தார். இவரது 'ஸ்டிரைக் ரேட்' 204.15 ஆக உள்ளது.
இந்திய வீரர்கள் ஆதிக்கம்
சர்வதேச கிரிக்கெட்டில் 2025ம் ஆண்டின் இறுதி தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஒருநாள் பேட்டர் வரிசையில் ரோகித் சர்மா (781 புள்ளி), கோலி (773) முதல் இரு இடம் பிடித்துள்ளனர்.
* 'டி-20' பேட்டர்களில் அபிஷேக் சர்மா (908) முதல்வனாக உள்ளார். திலக் வர்மா (805) 3வது இடத்தில் உள்ளார்.
* டெஸ்ட் அரங்கில் உலகின் 'நம்பர்-1' பவுலராக பும்ரா (879) திகழ்கிறார்.
* 'டி-20' பவுலர் வரிசையில் வருண் சக்ரவர்த்தி (804) முதலிடத்தில் உள்ளார்.

