/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'குரு' காம்பிர் குழப்பம் தீருமா... * இரு பயிற்சியாளர் 'பார்முலா' வருமா
/
'குரு' காம்பிர் குழப்பம் தீருமா... * இரு பயிற்சியாளர் 'பார்முலா' வருமா
'குரு' காம்பிர் குழப்பம் தீருமா... * இரு பயிற்சியாளர் 'பார்முலா' வருமா
'குரு' காம்பிர் குழப்பம் தீருமா... * இரு பயிற்சியாளர் 'பார்முலா' வருமா
ADDED : டிச 27, 2025 11:21 PM

மும்பை: இந்திய அணிக்கு இரண்டு பயிற்சியாளர்களை நியமிப்பது பற்றி பி.சி.சி.ஐ., பரிசீலித்து வருகிறது. இதனால் காம்பிருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மூன்றுவித கிரிக்கெட்டுக்கும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக காம்பிர் உள்ளார். இவரது பயிற்சியில் 'ஒயிட்பால்' போட்டியில் இந்தியா அசத்துகிறது. 2025ல் சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்), ஆசிய கோப்பை (டி-20) வென்றது.
டெஸ்டில் ஏமாற்றம்
ஆனால் டெஸ்ட் அரங்கில் சொதப்புகிறது. 19 டெஸ்டில் 10 தோல்வி, 7 வெற்றி, 2 'டிரா' சந்தித்தது. வெற்றி சதவீதம் 36.84. இதில் 'சேனா' நாடுகளுக்கு (தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) எதிராக 10 தோல்வியை சந்தித்தது. சமீபத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் 2 டெஸ்டில் முழுமையாக தோற்றது. இதனால் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அதிருப்தி அடைந்தது. டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியாளர் பதவியில் இருந்து காம்பிரை நீக்க விரும்பியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் (2025-27) எஞ்சிய 9 போட்டிகளுக்கு (2026ல் இலங்கை, நியூசிலாந்துக்கு எதிராக தலா 2 டெஸ்ட், இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட், 2027, ஜன.-பிப்.) பயிற்சியாளர் பதவியை ஏற்கும்படி முன்னாள் வீரர் லட்சுமணை அணுகியுள்ளது. இதை ஏற்க அவர் முன்வரவில்லை. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பொறுப்பை ஏற்க விருப்பம் தெரிவித்துள்ளார். இது காம்பிருக்கு சாதகமாக அமைந்தது.
வீரர்கள் பதற்றம்
பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''பயிற்சியாளர் காம்பிர் வருகைக்கு பின் இந்திய அணியின் 'டிரஸ்சிங் ரூமில்' குழப்பமான சூழல் நிலவுகிறது. அணியில் நிரந்தர இடம் இல்லாதது போல வீரர்கள் உணர்கின்றனர். 'டி-20' உலக கோப்பைக்கான அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டது சலசலப்பை அதிகரித்தது. இதே நிலை தங்களுக்கும் ஏற்படலாம் என அஞ்சுகின்றனர்.
காம்பிரின் ஒப்பந்த காலம் வரும் 2027, உலக கோப்பை தொடர் வரை உள்ளது. இந்திய கிரிக்கெட் போர்டில் இவருக்கு ஆதரவு அதிகம். வரும் 'டி-20' உலக கோப்பையை இந்தியா தக்க வைத்தால் அல்லது பைனலுக்கு தகுதி பெற்றால், பயிற்சியாளராக நீடிப்பார். ஆனாலும் டெஸ்ட் பயிற்சியாளராக தொடர்வாரா என்பதில் சந்தேகம் உள்ளது.
'டி-20' உலக கோப்பை (2026, பிப்.7-மார்ச் 8, இந்தியா, இலங்கை) முடிந்த பின் இரு மாதம் பிரிமியர் கிரிக்கெட் தொடர் (2026, மார்ச் 26-மே 31) நடக்க உள்ளது. இதனால் ஒற்றை பயிற்சியாளரா அல்லது டெஸ்ட், 'ஒயிட் பால்' போட்டிக்கு என தனித்தனியாக இரு பயிற்சியாளரா என்பது பற்றி முடிவு செய்ய பி.சி.சி.ஐ., நிர்வாகிகளுக்கு போதிய கால அவகாசம் உள்ளது. அடுத்த மூன்று மாதம் 'குரு' காம்பிருக்கு முக்கியமானது,''என்றார்.

